பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணும் நோக்கில், நாடு முழுவதும் ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் அழைப்பதற்கான விசேட கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று (03) பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இந்த விசேட ஆணை பிறப்பிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கைப் பராமரிப்பதில் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினர் நாடளாவிய ரீதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ள இடங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, காவல்துறைமா அதிபரின் பணிப்புரைக்கு அமைய, அனைத்து காவல்நிலையங்களுக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களை கருத்திற்கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் மற்றும் போராட்டங்கள் ஏற்படக்கூடும் என்ற அச்ச நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் 24 மணித்தியால பாதுகாப்பு சேவையை தற்போது வழங்குவதில் காவல்துறை சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.கொழும்பில், பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் மாபெரும் வருடாந்த கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த சிக்கல் நிலை உருவாகியுள்ளது.
அதன்படி, காவல்துறையினரின் ரோந்து நடவடிக்கைகளையும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



