மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இலங்கையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற பதற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் உட்பட நாட்டின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் எரிபொருளை சேமித்து வைக்கும் செயற்பாட்டின் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைக் காரணமாக, இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் எவ்வித அச்சத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.A.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள விசேட குரல் பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “ஈரான் போர் ஆரம்பமாகியுள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் மக்கள் தேவையற்ற முறையில்கு ழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் அவ்வாறு குழப்பமடைய வேண்டிய எந்த அவசியம் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.
ஒரு மாதத்திற்கும் அதிகமான காலத்திற்கு எவ்விதப் பிரச்சினையுமின்றி எம்மால் சேவைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது உள்ள கையிருப்பு மற்றும் நாட்டை வந்தடையவுள்ள எரிபொருள் கப்பல்களின் விபரங்களின்படி இன்னும் 37 நாட்களுக்குப் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது
கைவசம் உள்ள சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் பெரும்பாலும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து வருவதில்லை என்றும் இந்தியா, சிங்கப்பூர், கொரியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்தே எரிபொருள் கொண்டுவரப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் கூட, எமது இறக்குமதிக்கு ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் D.A.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உலகின் மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) ஈரான் முழுமையாக மூடியுள்ளது.
இனி எந்தவொரு கப்பலும் இந்த நீரிணை ஊடாகப் பயணிக்க அனுமதி இல்லை என ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இலக்குகளுக்கு எதிராக ஈரான் முன்னெடுத்து வரும் பழிவாங்கும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஈரானிய செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதால், உலகளாவிய எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



