ஈழத்தமிழர் இறைமை பேணப்படுமென்ற நம்பிக்கையை மீள்வித்துள்ள பிரித்தானிய தமிழ் இளையோரமைப்பின் கூட்டு முயற்சி | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 380

கடந்த வாரத்தில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத் தின் அழைப்பின் பெயரில் நேரடி விவாதத்தில் கேள்வி கேட்கும் வகையில் இடம்பெறவிருந்த சிறிலங்காவின் ஜாதிக பெரமுனையின் தலைவர்களில் ஒருவரும் சிறிலங்காவின் முன்னாள் அரசத்தலைவர் மகிந்த ராஜபக்சாவின் மகனுமான நாமல் ராஜபக்சாவுடனான விவாத அரங்கங்கள்,  தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரித்தானிய தமிழ் இளையோரமைப்பினர் ஐக்கிய இராச்சியத்தின் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ் மாணவர் சங்கங்களின் கூட்டுடன் முன்னெடுத்த மதிநுட்பம் மிகுந்த சனநாயகவழி எதிர்வினையாற்றல்கள் மூலம் கைவிடப்பட்டன. இதனை அண்மைக்கால ஈழத்தமிழர் இறைமை மீளுறுதிப் போராட்ட வரலாற்றில் இமாலயச் சாதனையாக இலக்கு கருதி செயற்பட்ட இளையோர்களைப் பாராட்டுகிறது.
இந்த நிகழ்வு,  ஒன்றல்ல இரண்டு உலகின் முதன்மைப் பல்கலைக்கழகங்கள் தங்களின் மாணவர் ஒன்றி யத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட விவாத அரங்க நிகழ்வுகளைக் கைவிட்ட வரலாறாக உலகில் பதிவாகியுள்ளது.  இது இயலாதென்பதையும் இயலுமாக இளையோரும் மூத்தோரும்  ஒன்றிணைந்த  உரிய எதிர்வினையால் மாற்ற முடியுமென்று நிரூபித்துள்ளது. இந் நிகழ்வு ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஈழத்தமிழ் செயற்பாட்டாளர்களுக்கு ஈழத்தமிழர் மேலான எந்த அழுத்தத்தையும் கண்டு பரக்கப் பரக்கச் செயற்படாது வரவரக்கண்டு அதற்கான எதிர்வினையை மக்களின் ஒருமைப்பாட்டுடன் தேசியத்தின் மீதான உறுதியுடன் இறைமையின் உண்மைத்தன்மையை முன்னிறுத்தி  சனநாயகப் போராட்டம் மூலம் முன்னெடுத்தால் ஈழத்தமிழர் இறைமையைப் பேணமுடியும் என்கின்ற உண்மையையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.  இந்நிகழ்வு  கடந்த 17 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களால்  யாராலும் பயன்தரக்கூடிய முறையில் அரசியலில் எதையும் செய்ய முடியாதிருக்கிறதென இருந்து வந்த இறுக்கத்தன்மையை கட்டுடைத்துள்ளது.
விடாத உறுதியுடனான சிறிய முயற்சிகள் பெரிய சாதனைகளை வரலாற்றில் ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக அமைந்த இந்த நிகழ்வு நடந்த அதே வார இறுதியில் இலண்டனில் இடம்பெற்ற பிரித்தானியாவின் தமிழ்மொழி பண்பாட்டு மரபுரிமை மேம்பாட்டுக் கூட்டணியின் அதிதிறன் பெற்ற மாணவர்களின் மதிப்பளிப்பு விழாவில் கல்வியில் ஒரு பாடத்திட்டம் முன்னெடுக்கப்படும் வழமையே எந்த நாட்டிலும் உள்ளது. எனவே 22.05. 1972 முதல் அரசற்ற தேசஇனமாக உலகில் தேசங்கடந்துறை மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் தமிழ்மொழிக் கல்வியைப் பன்முகப்படுத்தி தமிழர் ஒழுங்கிணைப்புக் குழுவின் மூலம் தேசியத்தலைமையால் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழரின் தேசியக்கல்வியின் ஒருமுகப்பட்ட சிந்தனைப் பள்ளி முறையை (School of Thought)  சீரழிக்க வேண்டாமென்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்வி ஊடகம் என்பன சமகாலத்தில் அறிவூட்டல் வழி மக்களுக்குச் சக்தியளிக்கும் முக்கிய தளங்களாக உலகில் திகழ்கின்றன.  இவற்றில் தேசங்கடந்து வாழும் ஈழத்தமிழரிடம் ஒருமைப்பாடு இல்லையென்றால் மக்களுக்கு ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளிலும் தாயகத்திலும் சக்தியளித்தல் தடுமாற்றம் அடையும்.  இதனால் ஈழத்தமிழ் இளையோர் தங்களின் அடையாளத்தை தாய் மண்ணில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை உள்ள தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையின் அடிப்படையிலான தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை அறிந்து கொள்ளுதலில் தடுமாற்ற மடைந்து தங்கள் ஈழத்தமிழ்த் தேசியத்தவர் என்கின்ற  அடையாளத்தை இழப்பர். எனவே இறைமை என்பது ஒருமைப்பாட்டினை அடித்தளமாகக் கொண்டதால் ஒருமைப்பாட்டை யார் எங்கு பலவீனப்படுத்தினாலும் அவர்கள் இறைமை நீக்கத்துக்கும் தேசிய நீக்கத்துக்குமே கல்வியிலும் ஊடகத்திலும் பன்முனைவாக்கங்களைச் செய்பவர்களாகவே அறிந்தோ அறியாமலோ மாறுவார்கள்.
இன்று சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் ஹரிணி அமரசேகர அவர்கள் சிறிலங் காவுக்கான கல்விச் சீர்திருத்தத்தை சிறிலங்காவினருக்கான தேசியத்தன்மையை தாயகத்தன்மையை தன்னாட்சித்தன்மையை மேலும் மீளுறுதி செய்யும் வகையில் முன்னெடுத்து வருகின்ற நேரத்தில் ஈழத்தமிழர்களின் தேசியத்தன்மையை தாயகத்தன்மையை தன்னாட்சித்தன்மையை இறைமையின் இருப்பை ஒரே பாடத்திட்டத்தால் அறிவாக்க வேண்டிய பணியை ஈழத்தமிழர்கள் அனைத்துலகிலும் செய்வதன் மூலமே தமிழ்மொழி பண்பாடு மரபுரிமை மேம்படும் என்பதே இலக்கின் எண்ணமாகவுள்ளது. எனவே பாடத்திட்டம் ஒரு ஊடகமுறைமை என்பது சமகாலத்தின் கட்டாயமாகிறது என்பதை இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது. அணுகுமுறைகள் மாறலாம் ஆனால் இலக்கு ஒருபாடத்திட்டத்தை ஒரு ஊடகக் கொள்கையை கொண்டதாக அமைதல் காலத்தின் தேவையாகிறது.
இதனுடன் இணைந்ததாகவே சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பினை எவ்வாறு எதிர்கொள்வது என்கின்ற ஈழத்தமிழ் அரசியல்வாதிளினதும் செயற்பாட்டாளர்களினதும் அணுகுமுறைகளையும் எடுத்து நோக்க வேண்டியுள்ளது. ஒரு மக்களின் இறைமை மூன்று தளங்களில் மீளுறுதி செய்யப்பட்டலாம். ஒன்று அந்த மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்கள் தொன்மையும் தொடர்ச்சியுமாக தேசஇனமாக வாழ்வதை சான்றாதாரங்களுடன் நிரூபித்து ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் என்ற தகுதிக்குத் தாங்கள் உரியவர்கள் என்ற உரிமை வழி ஐக்கியநாடுகளின் அனைத்துலக சட்டங்கள் வழி உறுதி செய்வது. இதனைத் தமிழரசுக்கட்சி என்ற 1949 முதல் 1975 வரையான ஈழத்தமிழரின் அரசியல் கட்சியின் பரிணாமத்தில் காணலாம்.
அடுத்தது சட்டத்தின் மூலம் அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்பத் தங்களின் இருப்பையும் இறைமையையும் உறுதி செய்வதன் வழி மீளுறுதி செய்வது. இதனைத் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரசின் 1945 முதல் இன்று வரையான வரலாற்றுப் பரிணாமத்தில் காணலாம். இறுதியானது ஒரு மக்கள் இனம் தனது உயிரையும் பொருட்படுத்தாது தனது இறைமைக்காகப் போராடுவதன் மூலம் இறைமையை மீளுறுதி செய்வது. இதனை 1978 முதல் 2009 வரையான ஈழத்தமிழரின் நடைமுறையரசிலும் அதனை உறுதிப்படுத்திய ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்திலும் காணலாம்.
இன்று வரலாற்று வழியாக இறைமையை மீளுறுதி செய்வதும் உயிரையும் பொருட்படுத்தாது மீளுறுதி செய்வதும் ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை உலக வல்லாண்மைகள் பிராந்திய மேலாண்மைகள் சிறிலங்காவின் ஈழத்தமிழின அழிப்பு நோக்கிலான அரசியல் கொள்கைகள் கோட்பாடுகளை 1948 முதல் இன்றுவரை அனைத்துலக சட்டங்களுக்கு ஏற்புடைய செயலாக வெளிப்படுத்தி ஈழத்தமிழரின் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை கொண்டிருக்கும் போர்த்துக்கேயரால் 1621 இல் 116 ஆண்டு முயற்சியின் பின்னர் 37 ஆண்டுகளும் ஒல்லாந்தரால் 1658 முதல் 138 ஆண்டுகளும்  பிரித்தானியரால் 156 ஆண்டுகளும்  அரசுகளால் கையகப்படுத்தப்பட்ட இறைமை யில் அரசியல் விடுதலைக்காகப் போராடியவாறே வாழ்ந்து, பிரித்தானியர்களால் காலனித்துவத்தால் தீர்க்கப் படாத பிரச்சினையாக சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமையும் 1948 முதல் 1972 வரை அரசியல் விடுதலைக்காகப் போராடி 1972 முதல் இன்று வரை 54 ஆண்டுகள் அரசற்ற தேசஇனமாகச் சிறி லங்கா என்னும் படைபல ஆக்கிரமிப்புக் கொண்டு தங்களின் தாயகத்தை ஆக்கிரமித்து தங்களின் அரசியல் பணிவை இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெறும் ஆக்கிரமிப்பு அரசிலிருந்து 1975இல் பாராளுமன்ற விலகலுடன் கூடிய தன்னாட்சிப் பிரகடனத்தின் மூலமும்  1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானமாகத் தங்களின் பிரிக்க இயலாத தன்னாட்சி அதிகாரத்தின் வழியாகத் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியுடன் கூடிய வளர்ச்சியை முன்னெடுக்க சிங்கள தேசத்திற்கும் உலகிற்கும் அறிவித்து அதனை 1977 தேர்தல் மூலம் குடியொப்ப ஆணையாக வெளிப்படுத்திய வரலாற்றுப் பின்னணியில் 1978 முதல் 2009 வரை நடைமுறையரசில் அதனை உறுதிப்படுத்தி அதற்கான அனைத்துலக அங்கீகாரத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் 2009 இல் சிறிலங்காவின் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் மூலம் தேசமாக 146000 ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டு நடைமுறையரசின் உட்கட்டுமானங்கள் அனைத்தும் சிறிலங்காவின் இனத்துடைப்பால் சிதைக்கப்பட்டு இன்று வரை 17 ஆண்டுகள் சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்புடன் கூடிய நில ஆக்கிரமிப்பாலும் தேசிய நீக்கத்தாலும் இறைமை நீக்கத்தாலும் இன்று சொந்தத் தாயகத்திலேயே அடிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிறிலங்காவின் பயங்கரவாததடைச்சட்டம் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச் சட்டம் இரண்டினாலும் இனங்காணக்கூடிய அச்சத்தை சந்திக்கும் நாளாந்த வாழ்வில் சட்டத்தின் மூலம் இறைமைய மீளுறுதி செய்ய இயலாத நிலையில் ஏற்கனவே ஏற்கப்பட்ட திம்புப் பேச்சுவார்த்தை என்னும் அனைத்துலக ஏற்புக்கொள்கையை முன்னிறுத்தி தன்னாட்சியுடன் கூடிய கூட்டாட்சி என்பதன் வழி இருப்பை உறுதி செய்யும் முயற்சியைச் சிறிலங்காவின் புதிய அரசியலமைப்பில் நிலைப்படுத்த தமிழ்த்தேசிய மக்கள் பேரவையினர் நல்லூர் தீர்மானத்தை இம்மாதம் 15ம் திகதியும், இம்முயற்சி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை சிறிலங்கா உள்வாங்கும் முயற்சியாக மாறிவிடக்கூடாது, அப்படி நடந்தால் எக்காலத்திலும் தன்னாட்சியின் அடிப்படையில் இறைமையை மீளுறுதி செய்ய இயலாது என இம்மாதம் 14ம் நாள் ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்று திருகோணமலைத் தீர்மானத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் இருதரப்பினரும் நேரடியான விவாத அரங்குகளை அமைப்பதன் மூலமாகவே எதார்த்த அரசியலையும் இலட்சிய உறுதிப்பாட்டையும் எவ்வாறு போட்டியிடுதல் ஒத்துழைப்பு என்னும் முறைமைகளில் மக்களுக்கும் மண்ணுக்கும் பயன் உடையதாக மாற்றலாம் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது. யேர்மனிய அதிபர் மேர்ஸ் அவர்களும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் அவர்களும் “போட்டியிடுதல் ஒத்துழைப்பு இணைந்ததாகவே இன்றைய உலகின் சமுக பொருளாதார அரசியல் வளர்ச்சிகள் தொடரும் எனக்கூறியிருப்பதைக் கவனத்தில் கொண்டு பகைமைகளை வளர்க்காது பகைமை நீக்கமே அரசியல் தலைமைக்கான சிறப்பான வழி என்பதைத் தெரிந்து செயற்பட வெண்டுமென்பதே இலக்கின் எண்ணம்.
ஆசிரியர்

Tamil News