வடக்கில் 36 வருடங்களாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட ஒரு கோயிலை முழுமையாக விடுவிக்குமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்லும் பாரம்பரிய பாதையை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இராணுவம், தமிழர்களின் தனியார் காணியை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கிலேயே மாற்றுப் பாதையை விரிவுபடுத்தும் பணியை ஆரம்பித்துள்ளதாக உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
தனியார் காணியின் ஊடாக ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குச் செல்ல இராணுவத்தால் அமைக்கப்பட்ட வீதியை அகலப்படுத்தும் முயற்சி, உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பினையடுத்து இராணுவத்தால் கைவிடப்பட்டுள்ளது.
இராஜேஸ்வரி அம்மன் கோயிலும் அதன் சுற்றுப்புறப் பகுதியும் ஜூன் 15, 1990 அன்று உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ் மக்களின் விவசாய நிலங்கள் வழியாக இராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக வீதிக்கு பதிலாக, கோயிலுக்குச் செல்லும் பழைய வீதியை விடுவிக்கவேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சுப்பிரமணியம் ரொசாந்த்குமார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மக்களின் காணியில் பாதி இராணுவத்தின் கீழ் உள்ளது. அவர்கள் இந்த விவசாய காணிகள் வழியாக ஒரு வீதியை அமைத்து, மக்கள் அதை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கின்றனர். இது கோவிலுக்குச் செல்லும் பழைய வீதி விடுவிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாகும். அவர்கள் வீதியை மாற்றுகிறார்கள். அவர்கள் இந்த தற்காலிக வீதியை அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், மக்கள் பழைய வீதியை கோருகின்றனர். பழைய வீதியை நிச்சயமாக விடுவிக்கவேண்டும்” என்றார்.



