பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அச்சுறுத்தல்!

இலங்கையின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும், பிரதி அமைச்சருக்கும் எதிராக உயிர் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

இந்த அச்சுறுத்தல்கள், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல ஆகியோரைக் குறிவைத்து விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடையதாக இந்த மிரட்டல்கள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அவிசாவளைப் பகுதியில் கிடைத்த உளவுத்தகவல்களின் அடிப்படையில் இந்த அச்சுறுத்தல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் குறித்தோ அல்லது கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களோ இதுவரை வெளியிடப்படவில்லை.  எனினும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.