யானை மனித மோதலில் இதுவரையான காலப்பகுதியில் 44 காட்டு யானைகளும், 10 மனித உயிர்களும் பலியாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் செவ்வாய்க்கிழமை (24) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இந்த மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளன. நாட்டின் மனித சமூகத்திற்கும் குறைந்து வரும் யானை கூட்டங்களுக்கும் இடையிலான நீடித்த மோதல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன.
துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், பயிர் நிலங்களை பாதுகாக்க சட்டவிரோத மின்சார வேலிகளை அமைத்தல், விஷம் கொண்ட உணவுகளை உட்கொண்டதனால் போன்ற பல்வேறு காரணங்களால் யானைகள் பலியாவதாக பதிவாகியுள்ளது.
மேலும், ரயில்களுடன் மோதல் மற்றும் நீரில் மூழ்குவது போன்ற விபத்து சம்பவங்களும் சில உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளன.
இதே காலப்பகுதியில் மனித யானை மோதல் பொதுமக்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 51 நாட்களுக்குள் யானை தாக்குதல்களால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மனித யானை மோதலை கட்டுப்படுத்துவதற்கான அவசரமான மற்றும் நீடித்த தீர்வுகள் தேவைப்படுகின்றன என்பது வலியுறுத்தப்படுகிறது.



