எவன்கார்ட் (Avant-Garde Maritime Services) நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் தாக்கல் செய்த இரண்டு நீதிப்பேராணை மனுக்களை விசாரணையின்றி தள்ளுபடி செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டது.
இந்த மனுக்களின் மூலம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்ட உத்தரவை செல்லாததாக்குமாறு எவன்கார்ட் நிறுவனம் கோரியிருந்தது. அந்த உத்தரவின் மூலம், இதுவரை நிறுவனம் பராமரித்து வந்த மூன்று ஆயுத களஞ்சியங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாயுத களஞ்சியங்கள், இலங்கையின் கடல் எல்லையை கடந்து செல்லும் கப்பல்களுக்கு கடல் கொள்ளையர் குழுக்களிடமிருந்து பாதுகாப்பு வழங்கும் ஒப்பந்தங்களுக்காக பயன்படுத்தப்பட்டன.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்களான ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவை முதற்கட்டமாக பரிசீலித்த பிறகு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளன.
தங்களின் வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன என்பது மனுதாரர்களின் வாதமாக இருந்தது.
ஆனால், இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள போதுமான சட்ட அடிப்படை இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவற்றை நிராகரித்தது.
இதனால், பாதுகாப்பு அமைச்சு வழங்கிய உத்தரவு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் எவன்கார்ட் நிறுவனத்திற்கு இச்செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட்டதன் மூலம், அவர்கள் அதிக இலாபம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனால் இலங்கை கடற்படைக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.



