அம்பாறை: அட்டப்பள்ளம் பகுதி கடலில் மூழ்கும் அபாயம்

அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் பகுதியானது கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுவருவதாகவும் அதனை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் அரசியல்வாதிகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என அட்டப்பள்ளம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீண்ட பழமையான பாரம்பரியங்களைக்கொண்ட தமிழ் கிராமமமாக காணப்படுகின்ற நிலையில் அண்மைக்காலமாக அட்டப்பள்ளத்தின் கரையோரப்பகுதிகள் பாரியளவில் கடலரிப்புக்கு உள்ளாகிவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்ட காலப்பகுதியிலிருந்து கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு வந்தபோதிலும் அது பாரியளவிலான கடலரிப்பாக இல்லாத நிலையிலும் அண்மைக்காலமாகவே கடலரிப்பானது பாரியளவில் இடம்பெற்றுவருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அருகில் இருக்கும் அரசியல்வாதியொருவர் கடலுக்குள் பாறை கற்களை கொட்டியுள்ளதன் காரணமாகவே கடலரிப்பானது மக்கள் குடியிருப்பினை சூழ அதிகளவில் நடைபெறுவதாகவும் இது தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கொண்டுசெல்லப்பட்டபோதிலும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தனியொருவர் கடலுக்குள் கற்பாறைகளை போட்டுள்ளமை தொடர்பில் கரையோரம்பேணல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் அது தொடர்பான பல்வேறு தரப்பினருக்கும் அறிவித்தல்களை வழங்கியபோதிலும் எவரும் கவனத்தில் கொள்ளவில்லையெனவும் அதேபோன்று தமது பகுதிகளிலும் கற்களை போடுவதன் மூலமே கடலரிப்பினை தடுக்கமுடியும் என நம்புவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.