யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளை உடனடியாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விடயத்தை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, ‘திட்ட வரைபு அறிக்கை’ ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சமர்ப்பிக்கும் வரை பணிகளைத் தொடர முடியாது.
சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே அங்கு நிலத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதாகக் கிடைத்த புகார்களையடுத்து, யாழ்ப்பாண அலுவலக அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.
1980ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், அனுமதி இன்றி இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும். இதன்படி, கடந்த 18ஆம் திகதி பணிகளை நிறுத்துமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம், இந்தத் திட்டம் கட்டாய சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை உடனடியாக நிறுத்துமாறு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



