ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

இனவழிப்பு செயற்பாடுகள் மீள நிகழாமையை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை உள்ளிட்ட 15 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு, யாழ்ப்பாணத்தில் நேற்று (22) நடைபெற்றது.

அரசாங்கம் கொண்டுவர விரும்பும் புதிய அரசியல் அமைப்பானது, சமஷ்டி அரசியல் முறையை அடிப்படையாகக் கொண்டு அமைய வேண்டும் என்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன், பழைய முறைப்படி மாகாணசபை தேர்தலை நடத்தி, மாகாண அதிகாரத்தை மக்கள் பிரதிநிதிகளிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், 40 வருடங்களுக்கு முன்னர் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம், தமிழ் மக்களின் விடுதலை போராட்டத்தை நசுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்டதாகவும் இதன்போது கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகப்பட்டதாகவும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதியின் உறுதிமொழிக்கு அமைய, பயங்கரவாத தடைச் சட்டம் முற்று முழுதாக இல்லா தொழிக்கப்பட வேண்டும் என்றும் பேராளர் மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு நடத்திய இன அழிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் யாவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு பன்னாட்டு நீதித்துறை கட்டமைப்பின் ஊடாக விசாரணை செய்யப்பட்டு, பரிகார நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சிறைச்சாலைகளில் மிக நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேராளர் மாநாட்டின் ஊடாக கோரிக்கை விடுப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காகப் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை உரிய நீதி கிடைக்கவில்லை என்பது கவலைக்குரியது.
இந்தநிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு அரசாங்கம் உடனடியாக நீதியை வழங்க வேண்டும் என இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு இலங்கை – இந்திய அரசுகள் மேற்கொண்ட கூட்டு இணக்கப்பாட்டின் அடிப்படையில் மீண்டும் மீனவர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
1996 மற்றும் 2017-ஆம் ஆண்டின் கடற்றொழில் சட்டங்களை உறுதியாக நடைமுறைப்படுத்துவதுடன், கடற்றொழிலாளர் கிராமங்களில் உள்ள படைத்தரப்பினரை வெளியேற்றி கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.