ஜி எஸ் பி பிளஸ் (GSP+) விடயத்தில் இலங்கைக்கு உதவுவதாக பிரான்ஸ் உறுதி

இந்த ஆண்டு இறுதியில் காலாவதியாகவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் (GSP+) வரிச்சலுகையை தக்க வைத்துக் கொள்வதற்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனிடம் (Emmanuel Macron) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உதவி கோரியுள்ளார்.

புதுடெல்லியில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோனுடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது, ​​இந்த வர்த்தக சலுகையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு, உதவுமாறு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சிமாநாட்டின் பக்க நிகழ்வாக இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இலங்கை ஜனாதிபதியின் கோரிக்கையை அடுத்து, ஜிஎஸ்பி பிளஸ் வசதியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு இலங்கைக்கு பிரான்ஸ் முழு ஆதரவை வழங்கும் என்று அந்நாட்டு ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையுடனான பல்வேறு வர்த்தக உடன்பாடுகள் மூலம் கூடுதல் சலுகைகளை வழங்குவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை காலாவதியாகவுள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் மீண்டும் அதற்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.