ஈழத்தமிழர்கள் இறைமையைப் பேண யாருமே பொலிஸ்காரராக அரசியல் நடாத்தாது இருக்க வேண்டிய நேரமிது | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 379

உலக அரசியல் முறைமை, அனைத்துலகச் சட்டங்கள் மட்டுமல்ல நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கூட ஆட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படும் நிலை இன்றைய உலகின் சமகால அரசியலாக உள்ளது.  அமெரிக்க அரச அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் அவர் கடந்த ஆண்டில் நாடுகள் மேல் விதித்த வர்த்தக இறக்குமதி வரிகள் சட்டத்திற்கு எதிரானது என்று அமெரிக்க அதியுயர் நீதிமன்றத்தின் ஆறு நீதியரசர்களின் தீர்ப்பு நேற்று வெளிவந்தது.  ஆனால் உடனேயே  அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் உள்ள உலக நாடுகளின் மேல் 10 வீத வரிவிதிப்பைச் செய்து தீர்ப்பை அமெரிக்க அதிபர் தான் மதிக்கப் போவதில்லையெனச் செயலில் காட்டினார். அது மட்டுமல்லாமல் தான் அமெரிக்க காங்கிரசிடம் வரி விதிப்புகள் குறித்த அதன் சட்டவாக்கங்களுக்கு அமைய வேண்டியதில்லையென தனது நிறைவேற்று அதிகாரமுள்ள அரசஅதிபர் பதவியின் வலிமையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் ஈரான் அமெரிக்காவுடன் உடன்பாட்டுக்கு வரவில்லையென்றால் ஈரானைத் தாக்கு வதற்கான கடல்வழி வான்வழி முன்னாயத்தங்களையும் அவர் செய்து வருவதும் ஈரான் இராணுவ ட்ரில் என்கின்ற போருக்கான முன்னொத்திகை நடத்தியதும் அதில் ரஸ்ய கப்பல்களும் இணைந்து அதனை நடத்தியதும் அத்துடன் மத்திய கிழக்கு விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைகள் எல்லைப்படுத்தப்பட வேண்டுமென்ற பாணியில் ரஸ்யா அறிவித்தல் விடுத்ததாக அல்அஜீராச் செய்திகள் வெளியானதும் உலகில் மூன்றாவது உலகப் போர் அருவநிலையில் இன்று நடைபெற்று வருவதை உண்மையான போராக வெளிப்படுத்தும் நிலை தோன்றி விடுமா என்கின்ற எச்சரிப்புக்கள் உலகின் பல ஆய்வாளர்களால் வெளிவந்தவண்ணம் உள்ளன. அதே நேரத்தில் சிறிலங்காவில் அமெரிக்காவின் பசிபிக் கடற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலரின் சிறிலங்காவுக்கான பயணம் சிறிலங்காவின் தேசிய நலனைப் பலப்படுத்தவும் அமெரிக்காவின் கடல்வழிப் பாதைகளை பாதுகாப்பதற்கான வெறும் பாதுகாப்பு ஒப்பந்தமாக மட்டுமல்லாது பொருளாதாரம், இறையாண்மை மற்றும் பிராந்திய உறுதிப்பாட்டுக்கான இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு விரிவாக்கமாக உள்ளதெனக் கொழும்புச் செய்திகள் எடுத்து விளக்கியுள்ளன.
இந்நிலையில், நிறைவேற்று அதிகாரமுள்ள அரச அதிபர் ஒருவர் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்திப் பாராளுமன்ற சனநாயக ஆட்சிமுறைக்குள்ளும் சர்வாதிகாரியாகச் செயற்பட முடியும் என்கின்ற நிலையை உலக வரலாற்றில் ஐக்கிய தேசியக்கட்சியின் சிறிலங்காவின் முன்னாள் அரச அதிபர் ஜே. ஆர் ஜயவர்த்தனா தான் 1978ம் ஆண்டில் அவரால் கொண்டு வரப்பட்ட இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு மூலமே உலகுக்கு முன்னுதாரணம் அமைத்தார் என்பது உலக அரசியல் வரலாறு. அவ்வாறே 1796 முதல் 1948 வரை 152 ஆண்டுகள் ஈழத்தமிழரின் இறைமையைத் தன்வயப்படுத்தி வைத்திருந்த பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் சோல்பரி அரசியல் அமைப்பின் மூலம் சிங்களப்பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமைக்குள் உட்படுத்திய பொழுது, சோல்பரி அரசியலமைப்பின் 29(2) விதியை பிரித்தானிய முடிக்குரிய அரச ஆட்சியாளரின் கவுன்சில் அல்லது பிரித்தானிய பாராளுமன்றம் மட்டுமே மாற்ற முடியும் என்கின்ற நிலையில், இலங்கைப் பாராளுமன்றத்துக்கு வெளியே நவரங்கலாவில் கூடிய ஈழத்தமிழர்களின் பாராளுமன்றப் பிரதிநிதிகளில் மூன்றில் இரண்டு பகுதியினருக்கு மேல் கலந்து கொள்ளாத அரசியலமைப்பு உருவாக்கச் சபை ஒன்றின் மூலம் சோல்பரி அரசியலமைப்புச் சட்டத்தை தன்னிச்சையாக மாற்றி, பிரித்தானிய பிரிவிக்கவுன்சில் சிங்கள மட்டும் சட்டத்தை மீளப்பெற்று வழக்கைத் தாக்கல் செய்த சிங்களம் மட்டும் சட்டத்தால் வேலையிழந்த கோடீஸ்வரன் என்பவருக்கு வழக்குத் தொகையுடன் அந்நாள் வரையான சம்பளத்தையும் வழங்கி, சோல்பரி அரசியலமைப்புக்கு அமைய புதிதாக அரச கரும மொழிச்சட்டத்தைக் மீளவும் பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும்  என்கின்ற தீர்ப்பை வன்முறைப்படுத்தி அரசற்ற தேசஇனமாக ஈழத்தமிழர்களையாக்கிய அந்த வழக்கே இன்று நீதிமன்றங்களின் தீர்ப்புக்களை உலகின் ஆட்சியாளர்கள் தங்கள் விருப்புக்கேற்ப அலட்சியம் செய்யும் உலக அரசியல் முறைமையைத் தொடக்கி வைத்தது என்பது வரலாறு.
ஈழத்தமிழர்கள் 22.05. 1972 இல் அரசற்ற தேச இனமாக்கப்பட்டதால் அவர்களின் தன்னாட்சி உரிமையைக் கொண்டு அவர்கள் தங்களுக்கான அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, காலனித்துவத்தால் தீரிக்கப்படாத பிரச்சினையாக ஈழத்தமிழர்கள் தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுள்ளவர்களாக உள்ளனர் என்ற வரலாற்று உண்மையின் அடிப்படையில் தங்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளைப் பேணி காலனித்துவத்தில் இழந்த தங்களின் அரசியல் உரிமையாம் தமது சொந்த மண்ணில் தமது பாதுகாப்பான அமைதியான ஆட்சியையும் மீள அமைப்பதற்கான வரலாறாகியது என்பதும் உலக வரலாறாக உள்ளது.
இதனை 1975இல் சிறிலங்காவின் தேசிய சபையில் உறுதி எடுக்காது அதிலிருந்து ஈழத்தமிழர்களின் அக்கால அரசியல் தலைவராக விளங்கிய சா.ஜே. வே. செல்வநாயகம் அவர்கள் ஈழத்தமிழர்களின் தன்னாட்சிப்  பிரகடனத்தை காங்கேசன் துறைத் தேர்தல் தொகுதியில் நடாத்தப்பெற்ற அடையாளக் குடியொப்பத்தின் வெளிப்பாடாகச்  செய்து அதன் பின்னர் வட்டுக்கோட்டை தீர்மானமாக 14.05. 1976இல் இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் அதனை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உலகுக்கு வெளிப்படுத்தி 1977 இல் அதற்கான ஈழத்தமிழரின் குடியொப்பத்தை தேர்தல் மூலம் உலகிற்கு உறுதிப்படுத்தி தேர்தலில் வெற்றி பெறும் ஈழத்தமிழர் பிரதிநிதிகள் தமிழீழத்தை அமைப்பதற்கான தேசிய சபையாகச் செயற்பட்டு தமிழீழத்திற்கான அரசியலமைப்பை உருவாக்குவார்கள்.
இதனை சிறிலங்கா சனநாயக முறையில் ஏற்க மறுத்தால் வேறு எந்த வழிகளிலும் அதனை அடைவோம் என உலகிற்குப் பிரகடனப்படுத்தினர்.  இதுவே 1978 முதல் 2009 வரையான ஈழத்தமிழர்களின் நடைமுறையரசுக்கான சட்டத்குதியை அளித்தமை வரலாறு. 2009 முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பின் மூலம் சிறிலங்கா தேசமாக 146000 க்கு மேற்பட்ட ஈழத்தமிழர்களை இனஅழிப்புக்குள்ளாக்கி கூடவே ஈழத்தமிழர்களின் தாயகத்தின் அனைத்து உட்கட்டுமானங்களையும் அழித்தும் அன்று முதல் இன்று வரை 17 ஆண்டுகள் மீளவும் சிறிலங்காப் பாராளுமன்றம் என்னும் ஈழத்தமிழர்களை ஆளும் அரசியலமைப்புத் தகுதியை இழந்த பாராளுமன்ற கொடுங்கோன்மை மூலம் ஈழத்தமிழர்களை 1956 முதல் இன்று வரையான 70 ஆண்டுகால திட்டமிட்ட ஈழத்தமிழின அழிப்பு, பண்பாட்டு இனஅழிப்பு இனத்துடைப்பு அரசியல் மூலம் தொடர்ந்து வரும் நிலையில் புதிய அரசியலமைப்பு ஒன்றினை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று கொண்டு வர முயற்சிக்கிறது.
இதனை ஈழத்தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றார்கள் அதற்கு அனைத்துலக இன்றைய புதிய அரசியல் முறைமைகள் எவ்வாறு அமையப் போகின்றன என்பதே இன்றுள்ள கேள்வி என்பது இலக்கின் இவ்வார எண்ணமாக முன்வைக்கப்படுகிறது. சீனா அமெரிக்காவுக்குச் சொன்ன யாருமே பொலிசாகச் செயற்படல் தேவையில்லை என்கின்ற கூற்றைத் தான் ஈழத்தமிழ் அரசியல் வாதிகளுக்குச் இலக்கு மீள்நினைவுறுத்த விரும்புகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை குறை கூறும் பிழைப்படுத்தும் அரசியலை விடுத்து அவர் அவரை இந்தச் சூழலில் தாயகம் தேசியம் தன்னாட்சியின் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்பான அமைதியான வளர்ச்சிகள் உள்ள எதிர்காலத்தை அமைக்க உழைக்க இலக்கு பணிவன்பாக அழைக்கிறது.
ஆசிரியர்

Tamil News