ஏகபோக அரசியலுக்கு முற்றுப்புள்ளி: மலையகத்தில் துளிர்விடும் “தேசிய மக்கள் சக்தி” : மருதன் ராம்

இலங்கை நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகப் பல்வேறு அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். உரிமைகளுக்காகவும், கௌரவமான சம்பளத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடிய ஒரு சமூகத்தின் வரலாற்றில், 2026-ம் ஆண்டு ஒரு மிக முக்கியமான திருப்புமுனையாகப் பதிவாகியுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நுவ ரெலியா விஜயம் மற்றும் எந்தவிதப் போராட்டங்களும் இன்றி வழங்கப்பட்டுள்ள சம்பள உயர்வு என்பன மலையக அரசியலின் போக்கையே மாற்றியமைத்துள்ளன. மலையக வரலாற்றில் இதுவரை காலமும் ஒரு சிறு தொகைச் சம்பள உயர்வுக்காகக் கூட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் அழைப்பின் பேரில் வீதியில் இறங்கிப் போராட வேண்டி யிருந்தது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக தங்களை வருத்தி தேயிலை கொழுந்துகளைப் பறிக்கும் கைகள், வீதிகளில் பதாதைகளை ஏந்தி கோஷமிட வேண்டிய அவலநிலை நீடித்தது. இருப்பினும், தற்போதைய அர சாங்கத்தின் கீழ், குறிப்பாகத் தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் கூற்றுப்படி, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக எந்தவிதப் பணிப்புறக்கணிப்புகளும் அல்லது வீதிப் போராட்டங்களும் இன்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆகக்கூடுதலான சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
புதிய முறையின் கீழ் ஒரு தோட்டத் தொழிலாளியின் அடிப்படைச் சம்பளம் 1,750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிலவிய இழுபறிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் சமந்த வித்யாரத்ன நேரடியாகத் தோட்டங்களுக்குச் சென்று தொழிலாளர்களின் சம்பளப் பட்டியல்களை ஆய்வு செய்தமை, அரசாங்கம் இந்த விடயத்தில் கொண்டுள்ள அக்கறையை வெளிப் படுத்துகிறது.
நாளொன்றுக்கு 400 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில் 200 ரூபாய் தோட்ட பிராந்திய கம் பெனிகளும் மீதம் 200 ரூபாய் வரவு செலவுத் திட்ட கொடுப் பனவு அடிப்படையில் அரசாங்கத்தினாலும் வழங்கப்படும். அரசாங்கத்தினால் எவ்வளவு காலத்துக்கு இந்த தொகையை வழங்க முடியும் என்ற விமர்சனம் காணப்படுகின்ற போதிலும் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தற்போதைக்கு அதிகரித்துள்ளது என்ற நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதியின் நுவரலியா விஜயம் மலையக பெருந்தோட்ட அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்றிட்டத்தின் மத்திய மாகாண நிகழ்வில் பங்கேற்கச் சென்ற ஜனாதிபதி, வழமையான அரசியல் மரபுகளை உடைத்து எறிந்தார். நுவரெலியா செல்லும் வழியில் தற்செயலாகத் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் சுகதுக்கங்களை விசாரித்தமை மலையக மக்களிடையே பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின்போது மலையக பெருந்தோட்ட மக்களை ஈர்த்த பல முக்கிய விடயங்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புப் படை யினரின் வளையத்திற்குள் இருக்காமல், ஒரு சாதாரண மனிதராகத் தொழிலாளர்களின் இடத்திற்கே சென்று அவர்களுடன் உரையாடினார் என்ற கருத்து மலையக மக்களிடையே முக்கிய பேசுபொருளாக உள்ளது. தொழிலாளர்கள் தங்களின் காணி உரிமை, லயன் அறைகளில் வசிக்கும் அவலம் மற்றும் பிள்ளைகளின் கல்விப் பிரச்சினைகளை ஜனாதிபதியிடம் நேரடியாகத் தெரிவித்தனர். இது ஒரு அரசியல் பிரச்சாரக் கூட்டமாக இல்லாமல், ஒரு தேநீர் இடைவேளையில் நடக்கும் சிநேக பூர்வமான உரையாடல் போல அமைந்தது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மலையக அரசியலில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள்
இந்தச் சந்திப்பும், சம்பள உயர்வும் மலையகத்தின் பாரம்பரிய அரசியல் களத்தில் பாரிய மாற்றங்களை விதைத்துள்ளன. தசாப்த காலங்களாக மலையகத்தை ஆதிக்கம் செலுத்தி வந்த தொழிற்சங்கங்கள், “சம்பளத்தைப் பெற்றுத் தருவது நாங்கள்தான்” என்ற பிம்பத்தை வைத்தே அரசியலில் நிலைத்து நின்றன.
ஆனால், போராட்டம் இன்றி சம்பளம் உயர்வு வழங்கப்பட்டமை, இந்தச் சங்கங்களின் அவசியத்தை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தேசிய அரசியல் நீரோட்டத்தில் மலையக மக்களை ஒன்றிணைக்கும் முயற்சி யில் வெற்றி பெற்று வருவதைக் காணமுடிகிறது.
இனவாத மற்றும் மொழிவாத அரசியலுக்கு அப்பாற்பட்டு, “உழைப்பிற்கேற்ற ஊதியம்” மற்றும் “சமூக நீதி” என்ற கோஷங்கள் தோட்டப்புற இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அரசாங்கத்திற்கும் மக் களுக்குமான தொடர்பில் இடைத்தரகர்களாக இருந்த அரசியல்வாதிகளின் தேவை குறைந்து வருகிறது.
ஜனாதிபதியின் நேரடி அணுகுமுறை, “நாங்கள் நேரடியாகவே ஜனாதிபதியிடம் பேச முடியும்” என்ற தன்னம் பிக்கையைத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளது. 1,750 ரூபாய் அடிப்படைச் சம்பளம் என்பது வெறும் இலக்கம் மட்டுமல்ல, அது ஒரு தொழிலாளியின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் சிறு முன்னேற்றத்தின் அறிகுறியாகும். எனினும், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சம்பள உயர்வு அவர்களுக்குப் போதுமானதாக அமையுமா என்ற விவாதங்களும் ஒருபுறம் நடக்கின்றன.
இருப்பினும், தோட்டக் கம்பனிகள் ஆரம்பத்தில் இந்தச் சம்பள உயர்வை வழங்க மறுத்த போதிலும், அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடும், சட்ட ரீதியான அழுத்தங்களும் இதனைச் சாத்தியமாக்கியுள்ளன. இது தொழிலாளர் வர்க்கத்தின் கௌரவத்தை நிலைநாட்டும் ஒரு வெற்றியாகக் கருதப்படுகிறது. மறுபுறம் எதிர் தரப்பில் உள்ள மலையக அரசியல் கட்சிகள் சம்பள உயர்வை வரவேற்கின்ற போதிலும் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக சில தோட்ட பகுதிகளில் மேலதிக கொழுந்து பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேநேரம் சம்பள உயர்வுக்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடு வர்த் தமானியில் வெளியிடப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்கால சவால்களும் எதிர்பார்ப்புகளும்
சம்பள உயர்வு ஒரு ஆரம்பம் மட்டுமே. மலையக மக்களின் வாழ்வில் முழுமையான மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் அடிப்படை விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்‌. குறிப்பாக லயன் முறைமையை ஒழித்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் காணி உரிமையுடன் கூடிய தனிவீடு வழங்கப்பட வேண்டும்.
தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்பட்டு, உயர்கல்விக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். தேயிலைத் துறையை மட்டும் நம்பியிருக்காமல், மலையக இளைஞர்களுக்குத் தொழிநுட்ப மற்றும் நவீன வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நுவரெலியா விஜயமும், தோட்டத் தொழிலாளர்களுடனான அவரது நேரடி உரையாடலும் இலங்கையின் அரசியல் கலாசாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளன.
போராட்டங்கள் இன்றிப் பெற்றுக்கொடுக்கப்பட் டுள்ள இந்தச் சம்பள உயர்வு, “அதிகாரத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்” என்ற அரசாங்கத்தின் கொள்கைக்குச் சான்றாக அமைந்துள்ளது. மலையக மக்கள் இனி ஒரு ‘வாக்கு வங்கியாக’ மட்டும் பார்க்கப்படாமல், இந்த நாட்டின் கௌரவமான பிரஜைகளாக அங்கீகரிக்கப்படுவதற்கான பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். அதேநேரம் சம்பள உயர்வு விடயத்திலும் ஏனைய அடிப்படை விடயங் களிலும் மலையக மக்கள் குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் விசேட கவனம் செலுத்த வேண்டியதும் அவசியமாகும்.