அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதி இலங்கைக்குப் பயணம்

உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளைப்பிரிவுகளில் ஒன்றான அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ  பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

அவர் இன்று 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார்.

உலகின் அரைப் பகுதியை உள்ளடக்கும் பரப்பில் இயங்கும் அமெரிக்க பசிபிக் கப்பற்படை, முக்கியமான கடல் வழித்தடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை வகித்து வருகிறது.

உலகளாவிய வர்த்தகத்திற்கும், எரிசக்தி போக்குவரத்திற்கும் முக்கியமான கடல் வழித்தடங்களின் சந்திப்பில் அமைந்துள்ள இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை இந்த விஜயம் மீண்டும் வலியுறுத்துகிறது. அட்மிரல் கேலர் இலங்கைக்கு மேற்கொள்ளும் இந்த விஜயம் அவரது இரண்டாவது விஜயமாகும். இது அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு பங்காண்மையை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது.