தனித்து விடப்படவுள்ள தமிழரசுக் கட்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் வெளியேறி, தமிழரசுக் கட்சி தனித்து விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளிடையே தேர்தல் காலத்தின் போது ஓர் ஒற்றுமையில்லாது, தங்கள் இஸ்டத்திற்கு செயற்பட்டு வந்தமையால், தமிழரசுக் கட்சியுடன் கூட்டணியாக இருந்த இரண்டு கட்சிகளும் வெளியேற விரும்பியுள்ளன.

இதற்கான பேச்சுவார்த்தைகள் இந்த இரு கட்சிகளிடையேயும் நடைபெற்றுள்ளது. இப்பேச்சுவார்த்தையை ரெலோ அமைப்பைச் சேர்ந்த ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழரசுக் கட்சி, கடந்த ஆட்சியில் ரணில் விக்கிரமசிங்கவுடன் இரகசிய உடன்படிக்கைகளை நடத்தியிருந்தது. இதன் சலுகைகள் தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சம்பந்தன் ஆகியோருக்கு உரித்தானது.

இந்த சலுகைகள் மூலம் தமிழரசுக் கட்சியினர் திருப்தியடைந்துள்ளதாகவும், ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளிப்படையாக தமிழரசுக் கட்சி எதிர் பிரசாரத்தில் ஈடுபட்ட அதேவேளை, திரைமறைவில் ஒரு இணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகின்றது. இதன் பயனாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் கோத்தபயா அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை ஏற்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேறிய புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்புக்கள் உள்ளதாக அறிய முடிகின்றது.

ஏற்கனவே விக்னேஸ்வரனுடன் ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவை இணைந்து முதற்கட்ட பேச்சுக்களை முடித்துள்ளனர். இதேவேளை அடுத்த சில தினங்களில் இந்த நான்கு தரப்பினரும் யாழ்ப்பாணத்தில் நேரில் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை தமிழரசுக் கட்சியின் அதிருப்தி நடவடிக்கைகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகள் ஏற்கனவே வெளியேறியிருந்தமையும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது, தமிழரசுக் கட்சி அதில் கையொப்பம் இட்டிருக்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ ஆகியவையே கையொப்பமிட்டன. எனவே புதிதாக அமையவுள்ள கூட்டணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரையே தொடர்ந்தும் பயன்படுத்தலாமா என்றும் ஆலோசிக்கின்றனர்.