சமூகங்களுக்கு எதிரான முறுகலை முன்கூட்டியே கண்டறிய நடவடிக்கை

இலங்கையில் வெறும் போரோ அல்லது மோதல்களோ இல்லாத நிலையை உருவாக்குவது மட்டும் அரசின் நோக்கமல்ல என்றும் ஒவ்வொரு பிரஜையும் கௌரவத்துடனும் நீதியுடனும் வாழக்கூடிய ஒரு நாட்டை கட்டியெழுப்புவதே தமது இலட்சியம் என்றும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். சமூகங்களுக்கு இடையில் முறுகல்கள் ஏற்படக்கூடிய இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவை வன்முறையாக மாறுவதற்கு முன்பே அவற்றைத் தீர்ப்பதற்கான ஒரு பொறிமுறையாக இந்த ‘முன்கூட்டிய எச்சரிக்கை முறைமை’ அமையும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த காலங்களில் இன அல்லது மத ரீதியான மோதல்கள் வெடித்த பின்னரே அரசு தலையிட்டது. ஆனால் அத்தகைய சூழலில் சேதங்கள் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து நாம் அறிமுகப்படுத்தும் இந்த புதிய முறைமை அந்த நிலையை மாற்றும்” என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் கண்காணிப்பு மற்றும் சமூக அறிக்கையிடல் மூலம், ஒரு மோதல் உருவாகும் முன்பே தரவுகளின் அடிப்படையில் அந்த இடங்களை நாம் கண்டறிய முடியும். எச்சரிக்கை கிடைத்தவுடன், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காவல்துறையினரை ஒருங்கிணைத்து உடனடி நடவடிக்கைகளை எடுக்க முடியும்.
அதேவேளை, தனிநபர் சுதந்திரம் மற்றும் தரவுகளின் பாதுகாப்பு குறித்து நாம் மிகுந்த அவதானத்துடன் செயல்படுவோம் என்றும் நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.