இலங்கையின் செயற்பாட்டுக்கு ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்கள் அதிருப்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக கொண்டு வரப்படவுள்ள இலங்கையின் திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல யோசனை குறித்து ஐக்கிய நாடுகளின் பல சிறப்பு அறிக்கையாளர்கள், ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர், தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான பணிக்குழு, கட்டாயப்படுத்தப்பட்ட அல்லது தன்னிச்சையான காணாமல் போதல்களுக்கான பணிக்குழு மற்றும் நீதிக்கு புறம்பான மரண தண்டனைகள், தனியுரிமை மற்றும் சித்திரவதை தொடர்பான சிறப்பு அறிக்கையாளர்கள், தமது கூட்டு அறிக்கையில் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

இந்த மாற்று யோசனையின் தற்போதைய கட்டமைப்பு “குறிப்பிடத்தக்க வகையில் தெளிவற்றதாகவும், பரந்ததாகவும் உள்ளது” என்று அறிக்கையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது சிவில் சமூகம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர்களை குறிவைக்கப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை,பயங்கரவாதத்தின் முன்மொழியப்பட்ட வரையறை, சட்டபூர்வமான கொள்கையைப் பூர்த்தி செய்யத் தவறிவிட்டது என்று அவர்கள் வாதிட்டுள்ளனர். இந்தநிலையில், பயங்கரவாத வரையறையை, மரணம், கடுமையான உடல் காயம் அல்லது பணயக்கைதிகள் பிடிப்பு உள்ளிட்ட நடத்தைகளுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என்று அறிக்கையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.