ஜே.வி.பியின் இந்திய உறவை அந்நாட்டு வெளிவகார அமைச்சு வரவேற்பு

ஜே.வி.பி. தலைவர்களின் இந்தியப் பயணம், இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இந்தியா கொண்டுள்ள நெருக்கமான உறவை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா இந்தியாவுக்கு தமது முதலாவது அதிகாரப்பூர்வப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்திய கலாசார உறவுகளுக்கான நிலையத்தின் அழைப்பின் பேரில் கடந்த 05ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை அவரின் இந்த இந்திய விஜயம் அமைந்திருந்தது.

இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் ஆகியோரை டில்வின் சில்வா உள்ளிட்ட குழுவினர் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மற்றும் அதன் அடிப்படையில் இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

இது இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான நகர்வாகும் என குறிப்பிடப்படுகிறது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘அயலவருக்கு முதலிடம்’ மற்றும் ‘மஹாசாகர்’ தொலைநோக்குப் பார்வையின் கீழ் இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு இங்கு உறுதிப்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டுள்ளது.