இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாகத் திக ழும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டின் அந்நியச் செலாவணி ஈட்டலில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இருப்பினும், அந்த துறையில் உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் வேதனம் தொடர்பான விடயங்கள் நீண்டகாலமாக விவாதத்திற்குரிய ஒன்றாகவே இருந்து வருகின்றன. அண்மையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தினசரி வேதனத்தை 1,750 ரூபாவாக உயர்த்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்பாட்டை எட்டியுள்ளது.
2026 ஜனவரி 30ஆம் திகதி உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடப்பட்ட இந்த உடன்பாடு, தொழிலாளர் சமூகத்தில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. 2026ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு இணங்க, இந்த வேதன உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது. முன்னதாக 1,350 ரூபாவாக இருந்த பெருந்தோட்ட தொழிலாளர்களின் தினசரி வேதனம், தற்போது 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 1,750 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்த 400 ரூபாய் அதிகரிப்பில் 200 ரூபாயை அந்தந்தப் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளும், மிகுதி 200 ரூபாயை அரசாங்கமும் ஒரு விசேட வரவு – செலவுத் திட்ட கொடுப்பனவாக வழங்க இணக்கம் கண்டுள்ளன. அதன்படி, தொழிலாளர்களின் அடிப்படை தினசரி வேதனம் 1,550 ரூபாவாகவும், அரசாங்கம் வழங்கும் வருகைக் கான ஊக்குவிப்புத் தொகையாக 200 ரூபாவாகவும் அமையவுள்ளது.
இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ள வேதனம் 2026 ஜனவரி மாதத்தில் இருந்து அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகரிப்புடனான வேத னம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பெருந்தோட்ட தொழி லாளர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க சாதகத் தன்மைகளும் காணப்படு கின்றன.
இதன்படி, இலங்கை எதிர்கொண்ட மிகக் கடு மையான பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மூன்று முதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளன. இவ்வாறான நிலையில், 1,350 ரூபாய் என்ற வேதனம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்க வில்லை. இந்த 1,750 ரூபாய் அதிகரிப்பு, அவர்களின் கொள்முதல் சக்தியை ஓரளவுக்கு உயர்த்தி, ஓரளவு கௌரவமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கும்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவ டைந்துள்ள நிலையில், ஒரு தடவையில் வழங்கப்பட்ட மிகப்பெரிய வேதன உயர்வாக இது கருதப்படுகிறது. இது தொழிலாளர்களின் உழைப்பிற்கு வழங்கப்பட்ட ஒரு தார்மீக அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது. வழமையாக வேதன உயர்வு விடயத்தில் கம்பனிகளுக்கும் தொழிற் சங்கங்களுக்கும் இடையில் நீண்டகால இழுபறிகள் நிலவும்.
ஆனால், இம்முறை அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு, தனது வரவு – செலவுத் திட்ட நிதியிலிருந்து ஒரு பகுதியை வழங்க முன்வந்திருப்பது ஒரு புதிய முன்னுதாரணமாகும். வேதன உயர்வு மூலம் தொழிலாளர் களின் குடும்பங்களில் போசாக்கு மட்டம் மற்றும் பிள்ளைக ளின் கல்விக்கான செலவுகளைச் செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.
குறிப்பாக, வறுமைச் சுழற்சியில் இருந்து விடுபட கல்வி மிக முக்கியமானது என்பதை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ள நிலையில், இந்த கூடுதல் வருமானம் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும். எவ்வாறாயினும் வேதன உயர்வில் உள்ள பாதகமான விடயங்கள் மற்றும் சவால்கள் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
அரசாங்கத்துக்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக் கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள இந்த உடன் பாட்டின் மீதான மிக முக்கியமான விமர்சனம் என்ன வென்றால், தனியார் துறையினரால் நிர்வகிக்கப்படும் கம்பனிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வரி செலுத்துவோரின் பொதுப் பணத்திலிருந்து ஊதியம் வழங்குவதாகும்.
ஒரு தனியார் நிறுவனம் இலாபம் ஈட்டும்போது அரசாங்கம் பங்கு கோருவதில்லை, ஆனால் வேதனம் வழங்கும்போது அரசாங்கம் பொறுப்பேற்பது நிதி ஒழுக்கத்திற்கு முரணானது என சில பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேநேரம், அரசாங்கம் வழங்கும் 200 ரூபாய் ‘வருகைக்கான ஊக்குவிப்புத் தொகை’ என்பதால், தொழிலாளர்கள் அதிக நாட்கள் வேலைக்குச் சென்றால் மட்டுமே முழுமையான பலனைப் பெற முடியும். நோய் அல்லது வேறு தவிர்க்க முடியாத காரணங்களால் வேலைக்குச் செல்ல முடியாதபோது அவர்களின் வருமானம் மீண்டும் குறைய வாய்ப்புள்ளது.
விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை யில், இந்த 1,750 ரூபாய் என்பது இன்று ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்குப் போதுமானதா என்ற கேள்வி எழுகிறது. அதிகரித்த சம்பளம் கையில் கிடைக்கும் போதே சந்தையில் பொருட்களின் விலைகளும் அதி கரிக்குமானால், இந்த உயர்வின் உண்மையான பலன் தொழிலாளர்களைச் சென்றடையாது.
தனது பங்காக 200 ரூபாயை அதிகரிக்க வேண்டியுள்ளதால், பெருந்தோட்டக் கம்பனிகள் ஆண்டுக்கு மேலதிகமாக 6 பில்லியன் ரூபாயைச் செலவிட வேண் டியுள்ளது. இதனால் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திச் செலவு அதிகரித்து, சர்வதேச சந்தையில் இலங்கைத் தேயிலையின் விலையதிகரிக்கக் கூடும். இது ஏற்றுமதிப் போட்டியைக் குறைக்க வாய்ப்புள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் நிதிப் பலம்
இலங்கை தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்த மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இவ்வாறானதொரு சூழலில், அரசாங்கத்தினால் எவ்வளவு காலத்துக்கு இந்த 200 ரூபாய் மேலதிக கொடுப்பனவைச் செலுத்த முடியும் என்பது ஒரு பாரிய வினாவாகும்.
2026 வரவு – செலவுத் திட்டத்தில் இதற்காக 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய ஆண்டிற்குப் போதுமானதாக இருக்கலாம். ஆனால், வரும் ஆண்டுகளில் அரசாங்கத்தின் வருமானம் குறையும் பட் சத்தில் அல்லது கடன் மறுசீரமைப்புச் சவால்கள் ஏற்படும் பட்சத்தில், இந்தப் பணத்தை வழங்குவது திறைசேரிக்கு பெரும் சுமையாக மாறும்.
ஒரு நீண்டகாலத் திட்டமாகப் பார்க்கும்போது, அரசாங்கம் வேதனம் வழங்குவது என்பது நிரந்தரத் தீர்வாகாது. அரசாங்கம் ஒரு கட்டத்தில் இந்த உதவியை நிறுத்தினால், கம்பனிகள் அந்த 200 ரூபாயையும் பொறுப் பேற்குமா? அல்லது தொழிலாளர்களின் சம்பளம் மீண்டும் குறையுமா? என்ற அச்சம் நிலவுகிறது.
அரச செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான கோரிக் கையாகும். இவ்வாறான விசேட கொடுப்பனவுகள் ‘சலுகை கள்’ எனக் கருதப்பட்டு, வருங்காலத்தில் நிறுத்தப்பட வேண் டும் என்ற அழுத்தம் சர்வதேச ரீதியாக ஏற்படலாம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,750 ரூபாய் வேதனம் உயர்வு என்பது ஒரு குறுகிய கால வெற்றியாகக் கருதப்படலாம். இது தொழிலாளர்களுக்கு உடனடி நிம் மதியைத் தந்தாலும், அதன் நீண்டகாலப் பயன் என்பது அரசாங்கத்தின் பொருளாதார நிலைத்தன்மையிலேயே தங்கியுள்ளது.
அரசாங்கம் தனது வரிப்பணத்திலிருந்து வேதனம் வழங்குவதை விட, பெருந்தோட்டக் கம்பனிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்க செய்து, அதன் மூலம் ஒரு கௌரவமான ‘வாழ்க்கைச் சம்பளத்தை’ கம்பனிகளே வழங்கும் நிலையை உருவாக்குவதே உண்மையான தீர்வாகும். இலங்கை அரசாங்கம் தற்போதைய நெருக்கடியைக் கடந்து செல்லும் வரை இந்த நிதியை வழங்கலாம்.
ஆனால், நீண்டகால அடிப்படையில் பெருந்தோட் டத் துறையில் காணி உரிமம், சுயதொழில் வாய்ப்புகள் மற்றும் நவீன விவசாய முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமே மலையக மக்களின் பொருளாதார விடுதலையை உறுதி செய்ய முடியும்.



