பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து தமிழரசு கட்சி, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

கடந்த காலங்களில் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அச்சட்டம் பதிலீடு செய்யப்படல் என்பவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த தேசிய மக்கள் சக்தியினர், இப்போது ஏன் அதற்கு நேரெதிராக மாறிவிட்டார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. முன்னர் எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் தற்போது ஆளுந்தரப்பில் இருப்பதன் காரணமாகவே தேசிய மக்கள் சக்தி இவ்வாறு செயல்படுவதாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலீடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் உள்வாங்கப்பட்டிருக்கும் மிகமோசமான கூறுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் விளக்கமளித்துள்ளனர்.

முன்னைய அரசாங்கங்களினால் பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பன முன்மொழியப்பட்ட வேளையில், அதனை நிராகரித்ததுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் எவ்வித பதிலீடுமின்றி முழுமையாக நீக்கப்படவேண்டும் என தேசிய மக்கள் சக்தி பின்பற்றிய கொள்கை குறித்தும் தெளிவுபடுத்தினர்.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி தாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த கையெழுத்துப் போராட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டமை, இச்சட்டத்தின் தொடர் பிரயோகத்துக்கு எதிராக அவர்கள் நிகழ்த்திய உரைகள் உள்ளிட்ட சகல விடயங்களையும் சுமந்திரன் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.

குறிப்பாக படைத் தரப்பினரால் ஏற்பட்ட இழப்புக்களுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கென ஸ்தாபிக்கப்பட்ட இழப்பீட்டுக்கான அலுவலகத்தில் படைத்தரப்பின் பிரதிநிதிகள் அங்கம் வகித்தல், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படாமை, பொறுப்புக்கூறல் விடயத்தில் இவை தவிர்ந்த வேறு நடவடிக்கைகள் எவையும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படாமை என்பன பற்றியும் சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் கரிசனை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.