வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறு கோரி தொடரும் மீனவர்களின் போராட்டம்!

டிராக்டரை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரவை வலை மீன்பிடிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (10) ஆறாவது நாளாகவும் இடம்பெற்றது.

கடந்த 5ஆம் திகதி முதல் மீனவர்கள் இந்த போராட்டத்தை  முன்னெடத்துள்ளதுடன், தீர்வு வழங்கப்படும் வரை போராட்டத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை என தெரிவித்திருந்தனர்.

அரசாங்கம் மாற்றுத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் வரை, டிராக்டர்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அதுவரை தமது வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த மீனவ சங்கத்தல் நீதிமன்றத்தால் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி மீதான நம்பிக்கையில் நீதிமன்ற வழக்கைத் தாம் மீள பெறுவதாகவும், ஆனால் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதிகாரிகள் கடற்றொழிலாளர்களின்  நிலைமையை உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

மேலும் மீனவர்களின் போராட்டம் காரணமாக சந்தைக்கு கொண்டுவரப்படும் மீன்களும்  குறைந்துள்ளதால் மீன்களின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன.

பேலியகொடை மீன் சந்தை , காலி மற்றும் சிலாபம் பகுதிகளிலும் மீன்களின் விலை அதிகரித்துள்ளமையால் நுகர்வோர் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.