ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டம் வியாழக்கிழமை (12) கொழும்பில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீளாய்வு உள்ளடங்கலாக ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், இன்று முதல் பல்தரப்பு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழு என்பது ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை ஒத்துழைப்பு உடன்படிக்கையின் அமுலாக்கத்தை மேற்பார்வை செய்வதுடன் இருதரப்பு உறவுகள், வர்த்தகம், மனித உரிமைகள், ஆட்சியியல் நிர்வாகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பன தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடும் ஒரு கட்டமைப்பாகும். இக்கட்டமைப்பின் சந்திப்பின்போது குறிப்பாக இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பிலும் மீளாய்வு செய்யப்படும்.
அதன்படி ஐரோப்பிய ஒன்றியம் – இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பு கடந்த 2024 பெப்ரவரி மாதம் ப்ரூசேல்ஸில் நடைபெற்ற நிலையில், 2025 ஆம் ஆண்டு அதனை கொழும்பில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
அதற்கமைய மேற்படி கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பில் பங்கேற்பதற்காக கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு வருகைதரவிருந்தனர்.
இருப்பினும் கடந்த நவம்பர் மாத இறுதியில் ‘தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து, கூட்டு ஆணைக்குழு சந்திப்பைப் பிற்போடுமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இல்ஙகை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அச்சந்திப்பு பிற்போடப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்றைய தினம் (10) நாட்டுக்கு வருகைதந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், பல்தரப்பு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளதுடன் கூட்டு ஆணைக்குழு கூட்டத்தின் முடிவில் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிடவுள்ளனர்.
இக்கூட்டு ஆணைக்குழு கூட்டத்துக்கு இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் அதன் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனி ஆகியோர் இணைத்தலைமை தாங்கவுள்ளனர்.
இச்சந்திப்புக்களின்போது விசேடமாக நிர்வாகம், மனித உரிமைகள், வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, ஏனைய இருதரப்பு பிராந்திய முன்னுரிமைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்படாமை மற்றும் அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு உள்ளிட்ட பல்வேறு தொடர்பில் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



