சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக மன்னாரில் சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (10) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போதே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ‘இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம்.
அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும் அதற்கான சட்டம் மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன.
இந்நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது.
இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம்’ என்றார்.



