2009ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இடம்பெற்றுள்ள சிறுவர் கடத்தல்களை ஒரு அரசியல் குற்றமாக பார்க்கமுடியாது என்று தமிழ் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் எப்ஸ்டீன் கோப்புக்களை மேற்கோள்காட்டி அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இருந்து இலங்கையில் தற்போதைய காலப்பகுதி வரை நடந்த சிறுவர்களின் கடத்தல்களை ஒரு அரசியல் குற்றமாக மாத்திரம் பார்க்கமுடியாது”
எப்ஸ்டீன் கோப்புகள் போன்ற குற்ற நிகழ்வுகள், உலக அரங்கில் ஒரு விடயத்தை கூறியுள்ளன.மிகக் கொடூரமான பாலியல் இச்சைகளுக்காக சிறுவர் சிறுமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கூறப்படுகின்ற போது இலங்கையிலிருந்து கடத்தப்பட்டிருக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு என்ன நடந்தது என்பதை அரசியல் சார்ந்த குற்றங்களுக்காக காணாமல் ஆக்கப்பட்டனர் என்ற கோணத்தில் மாத்திரம் விசாரணை செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறுவர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் 2009 முதல் 2026 வரைக்கும் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது தொடர்பான விசாரணைகளை பாலியல் சுரண்டல் என்ற ரீதியாகவும் மனித ஆட்கடத்தல் என்ற ரீதியாகவும் இலங்கை அரசு மேற்கொண்டதா? என்றும் உமாகரன் இராசையா கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்திற்கும் குறித்த கோணங்களில் தொடர்புடைய விசாரணைகளை மேற்கொள்ள பெரும் பொறுப்பும் கடப்பாடும் இருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பான கடிதமொன்றை ஜனாதிபதிக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும், ஜேவிபியின் பொதுச் செயலாளருக்கும் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் கையளிக்கவுள்ளோம் என்று தமிழ் தேசிய மறுமலர்ச்சி இயக்கத்தின் சட்டத்தரணி உமாகரன் இராசையா தெரிவித்துள்ளார்.



