“பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டிட்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற முடியாது” என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நிச்சயமாக அரசியல் செயற்பாடுகளுக்கு மக்களிடையே வளரும் எதிர்ப்பை மறுப்பதற்கும் அதனை அடக்குவதற்கும் தேவைப்படும் அதிகாரமாகவே இது பார்க்கப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசரகால சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை நாங்கள் எதிர்ப்பதுடன், இது தொடர்பில் வாக்கெடுப்பை கோருவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தியுள்ள காலத்தில் இதனை காரணம்காட்டி போராட்டங்களின் போது பொலிஸார் நடவடிக்கை எடுக்கின்றனர். பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொடூரமான சட்டம் இதனை நீக்கப் போகின்றோம் என்று கூறிய அரசாங்கம் இப்போது கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இதனை பயன்படுத்துகின்றது.
டிட்வா புயல் சேதங்கள் தொடர்பான திட்டங்கள் சீர்குலைக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவசரகால சட்டத்தை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இதற்கு முன்னரும் இது போன்ற அனர்த்தங்கள் நடந்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கும் பாதிக்கப்பட்டுள்ளன.
பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதற்கு அவசரகால சட்டம் அவசியமில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். “இதேவேளை விடுதலைப் புலி போராளிகள் உடல்கள் புதைக்கப்பட்ட இடங்கள் இராணுவத்தினர் வசமுள்ளன. அவற்றின் மீது நடக்கின்றனர். அந்த இடங்களை மக்களிடம் மீள கையளிக்க வேண்டும். மக்களின் உணர்வுகள் மற்றும் உணர்வுபூர்வமான விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.



