தமிழர் தாயகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பதற்றம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினமான இன்றைய தினத்தை தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்த வகையில், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சிங்கள – பௌத்த மயமாக்கப்படுதல், தாயகப் பகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையினராக்கும் நோக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி, இறுதிப் போரின்போது நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைக்கு நீதி, தமிழ் மக்களுக்கான நிலையான அரசியல் தீர்வு என்பவற்றை வலியுறுத்தியே வடக்கு – கிழக்கில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம், பொது அமைப்புகள், வணிகர் சங்கங்கள், கடற்றொழிலாளர் அமைப்புகள், சமூக நிறுவனங்கள் எனப் பல அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அதேநேரம் கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் மூவின மக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளிட்டோர் இணைந்து நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியும் அப்பகுதியில் இடம்பெற்ற நிலையில், அங்கு இரு சாராருக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதன்போது, சம்பவ இடத்தில் கடுமையான பதற்ற நிலை ஏற்பட்டதோடு, விசேட அதிரடிப் படையினரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு நீதி வேண்டி கடும் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.
இதேவேளை, இலங்கையின் 78ஆவது சுதந்திர தினமான இன்று (4) யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.

இலங்கை அரசின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு கரிநாள் என்பதை இலங்கை அரசுக்கு தெரிவிக்கும் முகமாக யாழ். பல்கலைக்கழத்தில் இவ்வாறு கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது. இதேவேளை, இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கப்படும் போராட்டமானது மட்டக்களப்பு – கல்லடிப்பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமானது.

அங்கு ஆரம்பமான போராட்ட பேரணி திருகோணமலை வீதியூடாக மட்டக்களப்பு நகரத்தை நோக்கிச் சென்றது. இந்தப் பேரணியில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அதேநேரம், மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கரிநாள் போராட்டத்திற்காக அம்பாறையிலிருந்து வந்தவர்களை இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி செல்வராணி தெரிவித்துள்ளார்.

அதன்படி, தாங்கள் வந்த பேருந்துகளை மறித்து அதற்குள் கஞ்சா பொதிகளை வைத்து தம்மை அச்சுறுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்ததாக அவர் குற்றஞ்சாட்டினார்.