மேலும் 10 பெய்லி பாலங்களை இலங்கைக்கு அனுப்பியது இந்தியா

டித்வா சூறாவளி பேரிடர் மீளமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக, இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தப் பாலங்கள் விசாகப்பட்டினத்திலிருந்து கொழும்புக்கு இந்திய கடற்படை கப்பலான ஐ,என்.எஸ் காரியல் (INS Gharial)மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளின் இணைப்பை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டது என இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெய்லி பாலங்கள் இலங்கைக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் சிறப்பு பொருளாதார உதவிப் பொதியின் ஒரு பகுதியாகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த திட்டம், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் அண்மைய இலங்கை பயணத்தின் போது அறிவிக்கப்பட்டது.

மீட்பு மற்றும் மீளமைப்பு முயற்சிகளில் புதுடெல்லி கொழும்புடன் தொடர்ந்து நிற்கிறது என்றும், இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.