பெருந்தோட்ட சமூகத்தை, அரசாங்கம் ஒதுக்கி வைத்துள்ளதாக ஐ.நா. பிரதிநிதியிடம் மனோ முறையீடு

டித்வா பேரழிவுக்குப் பிந்தைய நிவாரணம் மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களில், மலையக பெருந்தோட்ட சமூகத்தை, இன்றைய அரசாங்கம் ஒதுக்கி  வைத்துள்ளது என இலங்கையில் உள்ள ஐநா வதிவிட பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் மார்க் அந்ரே பிரான்சேவை சந்தித்து, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது திட்டமிட்ட இன ஒதுக்கல். எமது மக்கள் மீது பொறுப்பு ஐநா சபைக்கு இருக்கிறது. ஆகவே எங்கள் இந்த குற்றசாட்டை ஐ.நா சபை விசேட கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும்  மனோ கணேசன்  வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின், இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமான (Rebuilding Sri Lanka), திட்டங்களின் கீழ், டித்வா பேரழிவில் பாதிப்புக்கு உள்ளான மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இடமில்லை. அவர்களை நாம் இந்திய  வீடமைப்பு திட்டத்தின் கீழ்தான் வைத்துள்ளோம் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பகிரங்கமாக இலங்கையின் ஒரு முன்னணி ஊடகத்துக்கு கூறியுள்ளார்

இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமான (Rebuilding Sri Lanka), வீடமைப்பு திட்டத்தில், ஒவ்வொரு வீடும் அதிகபட்சமாக ரூபா. 50 இலட்சத்தில் வீடுகள் கட்டப்படும்; உரிய காணிகள் இல்லாதோருக்கு காணிகள் வழங்கப்படும்;  என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்த திட்டத்தை அனுராதபுரத்தில் ஆரம்பித்து வைக்கும் போது, அறிவித்தார். அதேவேளை இந்த திட்டத்தில், மலையக தமிழ் மக்களுக்கு இடமில்லை, என ஜனாதிபதியால் விசேடமாக, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்-நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள பிரபாத் சந்திரகீர்த்தி கூறுகிறார்.

மலையக தமிழர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? அவர்கள் என்ன, இந்திய பிரஜைகளா? இலங்கையின் ஏனைய மக்களுக்கு, இடர் நிவாரண நிலையத்தின் மீள் கட்டுமானத்தில் வழங்கப்படும், உரிமைகள், கொடுப்பனவுகள் என்ற அரசாங்க கவனிப்புகள், ஏன் எமது மக்களுக்கு வழங்க படமுடியாது? ஆகவே இது எமது மக்களை மாற்றான் தாய் பிள்ளைகள் போன்று, இரண்டாம் தர பிரஜைகள் போன்று, நடத்த படும் இன ஒதுக்கல் இல்லையா? இதை கவனத்தில் எடுங்கள் என  இலங்கையில் உள்ள ஐநா வதிவிட பிரதிநிதி ஒருங்கிணைப்பாளர் மார்க் அந்ரே பிரான்சேவையிடம்  மனோ கணேசன்  கோரிக்கை விடுத்துள்ளார்.