கடந்த வாரத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 20 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் சுதந்திர வர்த்தக வலய உடன்படிக்கையில் கையொப்பமிட்ட “ஒப்பந்தங்களின் தாய்” என்று பேசப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு புதுடில்லியில் இடம்பெற்றது. இன்றைய சமகாலத்தில் எல்லா உற்பத்தி களுக்கும் அதி முக்கியமானதான செமிக்கண்டக்டர் வழங்கலில் இந்தியாவை இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மிகப்பெரிய வழங்குநராக மாற்றி, ஐரோப்பிய ஒன்றியத் தின் மேலான அமெரிக்கப் பொருளாதார மேலாண்மையை நிலைகுலைத்துள்ளது. அத்துடன் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் சுதந்திர வர்த்தக வலயத்துள் இணைந்து கொண்டது. இந்தியாவின் மேல் அமெரிக்கா விதிக்கும் வரிகளின் வழியான பொருளாதாரத் தடைகளைத் தகர்த்து புதிய வேலைவாய்ப்புக்களையும் முதலீடுகளையும் உற்பத்திகளையும் சந்தைப் பெருக்கத்தையும் நெருக்கத்தையும் பெருமளவில் இந்தியா பெறுவதற்கான வாயில் திறக்கப்பட்டுள்ளது. கனடாவும் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய இருப்பது இந்தியாவுக்கு மேலும் வளத்தையும் பலத்தையும் அளிக்கவுள்ளது.
இவை எல்லாம் ஈழத்தமிழர்களுக்கும் அவர்கள் உரையாடல்கள் ராஜதந்திரம் வழியாக ஈழத்தமிழரின் தேசியப் பிரச்சினையை விளக்கவும் தாயகப் பொருளாதார தேவைகளைத் தெளி வாக்கவும் வேண்டுமென்ற அழைப்பை விடுக்கிறது என்பது இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது. உதாரணமாக இவ்வாரத்தில் எது உரையாடலுக்கு முக்கியமானதென்று பார்ப்போம். வவுனியா வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாரம்பரிய தமிழ்க்கிராமங்களான வெடிவைத்த கல்லு, ஈச்சங்குளம், கூழாங்குளம், காஞ்சூர மோட்டை, பூவரசங்குளம், கிராமங்களை உள்ளடக்கிய 400 ஏக்கருக்கும் மேற்பட்ட குடியிருப்புக்களுடன் கூடிய விவசாய நிலங்களும் 1921ம் ஆண்டில் ஒதுக்குக் காடாக வர்த்தமானிப்படுத்தப்பட்ட பெரியகட்டிக்குளம் 4000 ஏக்கர் நிலமும், தொல்லியல் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட 47 இடங்களும் தண்ணீரில் மூழ்கக் கூடிய வகையில் 3023 சிங்களக் குடியேற்றக் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு கிவுல் ஓயா நீர்த்தேக்கத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கிறது. இதனை உலக மயமாக்கி பாதிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்கான நீதியை கிடைக்கச் செய்வது இவ்வார உரையாடலுக்கான கடமையாகவுள்ளது.
மேலும் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தால் தொடங்கப்பெற்ற மேர்க்கசோ (Mercosur) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் பிரேசில், ஆர்ஜென்டினா, உருக்குவே, பராக்குவே, பொலிவியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய தென்னமெரிக்காவின் பொதுச்சந்தையுடனான உடன்படிக்கையும் பிரான்சு உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் மக்களின் எதிர்ப்புக்களையும் தாண்டி கடந்த வாரத்தில் கைச்சாத்தாகியதன் மூலம் ட்ரம்பின் கோட்டையாக அவர் கருதும் இலத்தீன் அமெரிக்க நாட்டுப் பிரதேசத்தில் ஐரோப்பிய ஒன்றியமும் பாதுகாப்புக்கு அமெரிக்க அணுவாயுதக்குடை கீழ் நிற்காது தனக்கான ஐரோப்பிய இராணுவத்தை அமைத்துத் தனது பொருளாதார வளர்ச்சியைத் தனியாகப் பெறும் நிலை தோன்றியுள்ளது. இதற்கு உதாரணமாக கிறீன்லாந்தை ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் இணைந்து தொடர்ந்தும் டென்மார்க்கினுடையதாகவே உறுதிப்படுத்தியுள்ளன. ஐரோப்பிய நாடுகளின் இந்த தனித்துவத்தைத் தக்க வைத்த வெற்றிக்கு அவைகளின் ஒன்றிணைந்து பணியாற்றும் ஒருமைப்பாட்டுப்போக்கும் உரையாடல்களும் இராஜதந்திரங்களுமே காரணமாகின. இதே ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்கள் கண்ணு க்கு முன்னால் எவ்வாறு ஒருமைப்பாடு வெற்றிக்கான தளம் என்பதை புரிந்து கொள்ள இவை உதவு மென்பது இலக்கின் எண்ணம்.
இவ்வாரத்தில் பெப்ரவரி 4ம் நாள் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் 1948இல் ஈழத் தமிழரின் மேல் நவகாலனித்துவமாகச் சிங்களப்பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளமன்ற முறைமை ஆட்சிமுறையைத் திணித்துச் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சியை நவகாலனித்துவ ஆட்சியாக ஏற்படுத்தி தனது காலனித்துவ ஆட்சியை விலக்கிக்கொண்ட நாள். ஈழத்தமிழர்கள் சிங்கள அரசுக்களின் இனஅழிப்பு வாழ்வுக்கு உள்ளாவதற்கு பிரித்தானியா உருவாக்கிய இந்த நவகாலனித்துவ அரச முறைமையே காரணம். இதனால் இந்நாளை ஈழத்தமிழர்கள் கரி நாளாக 1948 முதல் இன்றுவரை 78 ஆண்டுகள் தொடர்ந்து கடைப்பிடித்து தங்களுடைய தன்னாட்சி உரிமைக்காக உலகநாடுகளிடமும் மக்களிடமும் கோரி வருகின்றனர்.
அந்த வகையில் 2026 பெப்ரவரி 4ம் நாளில் உலகெங்கும் ஈழத்தமிழர்கள் நடாத்தும் ‘கரி நாள்’ பேரணிகளில் பெருமளவில் இணைந்து ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமைக்காக ஒருமைப்பாட்டுடன் குரல் கொடுப்பதிலாவது ஈழத்தமிழர்கள் தங்களுக்கு இடையில் உள்ள “வேறுபாடுகளுக்கு மேலாக எழுந்து” ஈழத்தமிழர்கள் தேசமாகப் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள் என உலகிற்கு வெளிப்படுத்தும் ராஜதந்திரச் செயற்பாட்டை செய்ய வேண்டும் என்பது இலக்கின் அழைப்பாகவுள்ளது. ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பினை தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்காது தடுப்பதற்கான பலமான குரலாகவும் இந்தப் பேரணிகளை அமைக்க வேண்டிய அதே நேரத்தில் தாயகத்திலும் உலகெங்கும் ஏக்கிய இராச்சியம் குறித்த நோக்கையும் போக்கையும் மக்களுக்கு விளக்கத் தக்க முறையில் கருத்தரங்கங்களும் மாநாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
வேறுபாடுகளுக்கு மேலாக எழுதல்” என்பது அரசியல் தத்துவமாகச் சீனாவுக்கு எட்டு ஆண்டுகள் இடைவெளியின் பின்னர் 60 வர்த்தக மற்றும் பண்பாட்டுத்தலைவர்களைத் தன்னு டன் பரிவாரமாக அழைத்துச் சென்ற பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டாமர் அவர்களும், சீனாவின் அரசத்தலைவர் ஜி ஜின்பிங் அவர்களும் இணைந்து 29.01.26 இல் கூறியுள்ளனர். “வேறுபாடு களுக்கு மேலாக எழுதல்” என்ற இந்த அரசியல் அழைப்பை ஈழத்தமிழர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளல் அவசியம். அதாவது இன்றைய உலகில் அரசியல் ‘அதிகாரத்தைத் தக்க வைத்தல்’ என்பதைத் தலைமைச் செல்நெறியாகக் கொண்டுள்ளது. அவ்வாறே பொருளாதாரம் ‘வர்த்தகப் போட்டியிடலையே’ தலைமைச் செல்நெறியாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் அதிகாரத்தைத் தக்கவைத்தலுக்காக எந்த அழிவையும் செய்தலும் வர்த்தகத்தை உறுதிப்படுத்தக் கழுத்தறுப்புப் போட்டியிடுதலும்’ இன்றைய உலகினை அனைத்துலகச் சட்டங்கள் ஒழுங்குகள் ஏதுமற்ற உலகாக மாற்றியுள்ளது. இதற்கு இவ்வார உதாரணம் ஈரான் மீதான ட்ரம்பின் “ஒப்பந்தம் செய் – இல்லையேல் தாக்கியழிப்போம்” என்னும் எச்சரிப்பு.
இதனால் இந்த எதார்த்த நிலையை விலத்திட முடியாது என்ற நிலையில்தான் “வேறு பாடுகளுக்கு மேலாக எழுதல்” என்பதே நடைமுறைச் சாத்தியமாகும் எனச் சீன பிரித்தானிய தலைமைகள் இணைந்து கூறியுள்ளனர்.. அதாவது வேறுபாடுகள் வேறுபாடுகளாகவே தொடர அவற்றுக்கு நடுவில் அறிவினையும் ஆற்றலையும் தொழில்நுட்பத்தையம் பகிர்வதன் மூலம் தமக்குத் தேவையான வளர்ச்சிகளில் இணைதல் நாடுகளுக்கு மட்டுமல்ல ஈழத்தமிழர்கள் போன்ற தேச இனங்களுக்கும் முக்கியமானதாகிறது. ஈழத்தமிழரின் இளைய சமுதாயத்தின் உலகளாவிய இருப்பை ஈழத்தமிழரின் தாயக இளையவர்களுடன் இணைப்பதற்கான முயற்சிகள் வழியாகவே இதனைச் செய்யலாம் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. அதுவும் பில்கேட் அவர்கள் கூறியது போல் இன்றைய காலம் “வேகவளர்ச்சியின் யுகம்” என்பதால் காலந்தாழ்த்தாது இதனைச் செய்யவேண்டும். மேலும் “விருப்புள்ளவர் கூட்டணி” என்ற உத்தியைப் பிரித்தானியப் பிரதமர் உக்ரேனுக்கு உதவும் விடயத்தில் கட்டமைத்த முன்மாதிரியைப் பின்பற்றி ஈழத்தமிழரும் தங்கள் இடையிலான வேறு பாடுகள் வேறுபாடுகளாகவே இருக்க கட்டமைக்கப்படும் பொது விடயத்தில் ஒருங்கிணைந்து “வேறு பாடுகளுக்கு மேலாக எழுதல்” என்பதை பழக்கப்படுத்தி வழக்கப்படுத்த வேண்டுமென்பது இலக்கின் இறுதி எண்ணமாகவுள்ளது.
ஆசிரியர்




