சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரிப்பு

2025ஆம் ஆண்டில் மட்டும் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

8,514 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டத்துடன் தொடர்பானவை என்றும் 1,941 முறைப்பாடுகள் அந்த நோக்கத்துடன் நேரடியாக தொடர்புடையவை அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 545 முறைப்பாடுகளும், பாரிய பாலியல் துஷ்பிரயோகங்கள் குறித்து 231 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.  அத்துடன் 38 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டில் 79 சிறுவயதுக் கர்ப்பங்கள், 3 கருக்கலைப்புகள் மற்றும் 9 சிறுவர் திருமணங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மேலும் சிறுவர்களுக்கு எதிரான சைபர் வன்முறைகள் தொடர்பாக 150 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக 20 சிறுவர்கள் உயிர் மாய்ப்புக்கு முயற்சித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் குறித்து 42 முறைப்பாடுகளும், 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கைவிட்டுவிட்டுத் தாய்மார்கள் வெளிநாடு சென்றமை தொடர்பாக 9 முறைப்பாடுகளும் அதிகார சபைக்குக் கிடைத்துள்ளன.

இவ்வாறான ஆபத்தான சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டே, சிறுவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடகக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.