யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் சிங்கள வீட்டுத்திட்ட விவகாரம் தொடர்பில் தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
குறித்த வீடமைப்பு திட்டங்கள் தொடர்பாக ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் வழங்கிய விளக்கங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் சில குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சிங்கள வீட்டுத் திட்டங்கள் தற்போது யாழில் வழங்கப்படுவதாகவும், அதனை நினைத்தபடி விற்பனை செய்வதாகவும் தமிழ் மக்கள் பலர் வீடுகள் இன்றி இன்றும் அலைக்கழிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய இளங்குமரன், காணி உறுதிப்பத்திரம் வழங்கிய பின்னர் அதனை விற்பனை செய்வதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது எனவும் இது தொடர்பில் சட்ட நடவடிக்கைக்குள் செல்வது சாத்தியம் அற்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “தற்போதைய அரசாங்கத்தில் தமிழ் மக்களின் காணியை அபகரிக்க ஒரு வர்த்தமானி வெளியிடப்பட்டது. அதில் 3 மாதங்களுக்குள் காணிகள் தொடர்பில் உறுதிப்படுத்தாவிடில் காணிகள் அரசுடமையாக்கப்படும் என கூறப்பட்டது” என்பதை சுட்டிகாட்டினார்.
“இதில் குறிப்பாக வெளிநாட்டில் புலம்பெயர்ந்து இருக்கும் காணி உரிமையாளர்களில் 90 சதவீதமானோர் இலங்கை அரசின் அச்சுறுத்தலால் நாடு கடந்து சென்றவர்கள்.அவ்வாறு இருக்கையில் போலியாக பல விடயங்களை கூறி சிங்கள குடியிருப்புக்கள் வருவதற்கு இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் காணியை அபகரிக்கின்றது” என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
குறிப்பாக இங்கு காலம் காலமாக உள்ளவர்களுக்கு வீடுகளை பெற்றுக்கொடுக்காது இருப்பது எவ்விதத்தில் நியாயம் மிக்கது? மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட காணிகள் வீட்டுத்திட்டங்களில் குடியிருப்பாளர்கள் இல்லாவிட்டால் அதனை பெற்று தமிழ் மக்களுக்கு வழங்குங்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இராமநாதன் அர்ச்சுனா, சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவில் 500க்கும் அதிகமான மக்கள் வீடுகள் இன்றி இருக்கின்ற நிலையில் தற்போது 250 வீடுகள் சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகின்றமை ஏன் என்பதே தனது கேள்வி என்று தெரிவித்தார்.
இதன்போது அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.



