திருகோணமலை போதிராஜ விகாரை புத்தர் சிலை தொடர்பான வழக்கில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை சர்ச்சைக்குரியது என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
திருகோணமலை நீதவான் நீதிமன்றத்திற்கு சென்றிருந்த அவர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“வழக்கின் குற்றவாளிகளுக்கு எதிராக காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையில் காவல்துறையினரை பிக்குகள் தாக்கியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது”
காவல்துறையினர் பிக்குகளை தாக்கியதை முழு நாடுமே பார்த்தது. விகாரைக்கு வந்த காவல்துறையினர், முத்துக்குடை உடையும் வரை தாக்கினார்கள் என்று உதயகம்மன்பில கூறியுள்ளார். இந்த நாட்டில் மதங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதத்திலேயே காவல்துறையினர் செயற்படுகின்றனர் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக செய்த முறைப்பாட்டில் ஆறு காவல்துறையினர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், பிக்குகள் செய்த முறைப்பாட்டுக்கு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.



