2025 : சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 10,455 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதில், 8,514 முறைப்பாடுகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேவேளை,  1,941 முறைப்பாடுகள் அதன் நேரடி அதிகாரத்திற்கு வெளியே பதிவு செய்யப்பட்டுள்ளன.

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளில்  545 பாலியல் அச்சுறுத்தல் தொடர்பானவை. 231 பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பானவை.

அத்துடன், 79 பதின்ம வயது கர்ப்பங்களும் மூன்று கருக்கலைப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

09 சிறுவர் திருமணங்கள், 38 பாலியல் துஷ்பிரயோகம் சம்பவங்கள், சிறுவர்களை இலக்கு வைத்து 150 சைபர் துஷ்பிரயோகம் சம்பவங்கள் மற்றும் 20 சிறுவர் தற்கொலை முயற்சிகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலதிகமாக, பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 42 முறைப்பாடுகளும்,  பெற்றோர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உரிய பாதுகாப்பின்றி விடப்படும் சம்பவங்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகளும்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தரவுகள் இலங்கையில் சிறுவர்களின் பாதுகாப்பு இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. “வெறுமனே சட்டங்களை மட்டும் நடைமுறைப்படுத்தாமல், அடிமட்ட அளவில் விழிப்புணர்வு மற்றும் முறையான தலையீடுகள் அவசியம்” என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.