சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் பரிசீலனை

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிப்பது தொடர்பில் அரசாங்கம் பரீசிலனை செய்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்  கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதை முழுமையாக தடை செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும், சமூக ஊடக தளங்களை அணுகுவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்மொழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் பல நாடுகள் ஏற்கனவே பாடசாலை மாணவர்களிடையே சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன எனவும், இலங்கையும் அத்தகைய மாதிரிகளை ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்கள் இணையத்தை பயன்படுத்தும் போது ஒழுக்க ரீதியாக தீங்கு விளைவிக்கும் மற்றும் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுவர்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை குறைக்க அரசாங்கம் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் செய்துள்ளது, இதற்கு ஏற்கனவே அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.