ஜனாதிபதி இனவாத்தைப் பரப்ப முயற்சி – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

இலங்கையில் தமது அரசாங்கம் உருவாக்கியுள்ள பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இனவாத்தைப் பரப்ப முயற்சிக்கின்றார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  குற்றம் சுமத்தியுள்ளார்.

தலதா மாளிக்கை மீது குண்டு தாக்குதல் நடத்தியவர்கள், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எதிர்த்து அப்பாவி மக்களை கொன்றவரின் ஆட்சியில் இவற்றை எதிர்பார்க்க முடியுமே தவிர, சிறந்த எதிர்காலத்தை அல்ல என்றும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் புதன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கணக்காய்வாளர் திணைக்களத்தில் அனுபவமும் அறிவும் கொண்டவர்களே இதற்கு முன்னர் கணக்காய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போது ஜனாதிபதியின் நண்பர்களை இந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகவுள்ளது. இதன் காரணமாகவே அரசியலமைப்பு பேரவை ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது.

நிலக்கரி விலைமுறி, கொள்கலன் விடுவிப்பு உள்ளிட்ட ஊழல், மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் தனக்கு தேவையான ஒருவரை கணக்காய்வாளராக நியமிக்க முயற்சிக்கிறது. எனினும் மகா சங்கத்தினர் கணக்காய்வாளர் திணைக்களத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரியொருவரை அந்த பதவியில் நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியிருக்கின்றனர். அதற்கான உரிமை அவர்களுக்கிருக்கிறது.

இறுதியில் அதனை ஒத்தி வைக்க வேண்டிய நிலைமை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தம்மால் உருவாக்கப்பட்டுள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக இனவாதத்தைத் தூண்டுவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றார். இந்நாட்டில் எமது கட்சி மாத்திரமே சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகவுள்ளது. தலதா மாளிக்கை மீது குண்டு தாக்குதல் நடத்தியவர்கள், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை எதிர்த்து அப்பாவி மக்களை கொன்றவர்களே இன்று ஆட்சியில் உள்ளனர். அவர்களது ஆட்சியில் இதனைத் தான் எதிர்பார்க்க முடியும். மாறாக சிறந்த எதிர்காலமொன்றை எதிர்பார்க்க முடியாது என்றார்.