திருமலை புத்தர் சிலை விவகாரம்: கைதான பிக்குகள் தொடர்ந்தும் விளக்கமறியலில் …

திருகோணமலை கடற்கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (28) குறித்த வழக்கு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களை எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

திருகோணமலை நகர கடற்கரையோரப் பகுதியில் அனுமதியின்றி கூடாரமொன்றை அமைத்து புத்தர் சிலையை ஸ்தாபித்ததாக, கரையோரப் பாதுகாப்பு மற்றும் மூலவள முகாமைத்துவத் திணைக்களம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 14ஆம் திகதி இந்த வழக்கு முதலில் விசாரணைக்கு வந்தபோது, 11 சந்தேகநபர்களில் 9 பேர் முன்னிலையாகினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்குச் சட்டமா அதிபர் மற்றும் திருகோணமலை துறைமுகக் பொலிஸார் இணக்கம் தெரிவிக்காததால், இவர்களுக்கான விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகின்றது.

சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தபோது, பலாங்கொடை கஸ்ஸப தேரர் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார். இருப்பினும், பின்னர் அந்தப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் உள்ளிட்ட முக்கிய பிக்குகளும் அடங்குகின்றனர்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பெப்ரவரி 2 ஆம் திகதி நடைபெறவுள்ளது.