பிரஜா சக்தியா..?  தேசிய மக்கள் சக்தியா..? யாருக்கான திட்டம்.? : பா.அரியநேத்திரன்

இலங்கையில் ஆட்சி செய்யும்  சிங்கள தலைவர்கள் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு புதிய பெயர்களில் அபிவிருத்தி திட்டங்கள், சமூக கட்டமைப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் அதை கைவிடுவதும் வழமை அந்த வகையில் 2024, நவம்பரில் ஆட்சி அமைத்த தேசிய மக்கள் சக்தி அரசு கடந்த 2025,  ஜூன் 30 ல் “பிரஜா சக்தி” என்ற பெயரில் தற்போது ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஏற்கனவே 1978, ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன ‘கம்உதாவ’, ‘மகாபொல’ என்ற பெயர்களுடனும்,                                              1990 ல் ஜனாதிபதி பிரமதாச ‘ஜனசக்தி’என்ற பெயருடனும், 1994 ல் ஜனாதிபதி சந்திரிகா ‘சமூர்த்தி’என்ற பெயருடனும், 2009, ஜனாதிபதி மகிந்த ‘ஹரித லங்கா’ ‘வடக்கின் வசந்தம்’, ‘கிழக்கின் உதயம்’.’மகிந்த சிந்தனை’ என்ற பெயர்களுடனும்
2015, நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரி ‘கம்பறலிய’என்ற பெயருடனும் 2023 ல் ஜனாதிபதி ரணில் ‘அஸ்வெசும’என்ற பெயருடனும் 2024, தற்போது ஜனாதிபதி அநுர ‘கிளீன் சிறிலங்கா’, ‘பிரஜா சக்தி’ என்ற பெயர்களுடனும் அபிவிருத் திகளுக்காக நிதிகள் ஒதுக்கி அவர்களுடைய அரசியல் பணியை முன்னெடுப்பதே இலங்கை நாட்டின் வரலாறாகும்.
பிரஜா  சக்தி” என்பது மக்கள் சக்தி என பொருள் படும் இதே பெயரை கடந்த 1990, ல் ஜனாதிபதி பிரமதாச “ஜனசக்தி” என்ற பெயரில் ஆரம்பித்தார் ஜனம் என்பதும் பிரஜா என்பதும் தமிழில் மக்களை (சமுகத்தை) குறிக்கும் “பிரஜா” என்பது சமஷ்கிருத சொல்லாகும்.
தேசிய மக்கள் சக்தியின் நோக்கம் சமூகத்தை வலுவூட்டுவதற்கும், சமூகத்திற்குள் பொருளாதார நன்மை கள் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற் கும் தற்போதைய அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயல்படுத்தப்படும்  தேசிய வேலைத்திட்டமாக “பிரஜா சக்தி” அமையும் என அரசாங்கம் குறிப்பிட்டாலும் இவ்வாறான பணிகளை உள்ளூராட்சி மன்றங்கள் மூலம், அல்லது சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூல மாக செயல்படுத்தாமல் ஏன் தனியாக இதனை அரசின் செல்வாக்கில் தமது கட்சி ஆதரவாளர்களை  நியமித்து முன் எடுக்கபடவேண்டும் என்ற விமர்சனங்களும்,கருத்துகளும் எதிர்கட்சிகள் முன்வைப்பதை காணமுடிகிறது.
இதையிட்டு ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார தலைமையில் கடந்த வருடம் 2025 ஜூன் 30 ல் ஜனாதிபதி அலுவலகத்தில் செயல மர்வு ஒன்றை ஏற்பாடு செய்து அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின் படி சமூகத்தை வலுவூட்டுவதற்கான பன்முக அணுகு முறையுடன் கூடிய வேலைத்திட்டமாக ”பிரஜாசக்தி” தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என கூறியதுடன் அதனை ஜனாதிபதி ஆரம்பித்து வைப்பார் என கூறிய  நிலையில் அந்த திட்டமானது கடந்த 2024 ஜூலை 04 ல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் வைபவ ரீதியாக  ஆரம்பிக்கப்பட்டது.
தற்போது, இந்நாட்டின் மொத்த சனத்தொகையில் ஒவ்வொரு 06 பேரில் ஒருவர், பல பரிமாண வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இவர்களில் 95.3% பேர் கிராமப் புறங்களிலும் தோட்டப் பகுதிகளிலும் வாழ்கின்றனர். இந்த நிலை தொடர்வது, நாட்டின் பொருளாதாரம் மற்றும் உற்பத்திச் செயல்முறையை பாதிப்பதோடு, சமூக வலுவூட்டல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து, முறையான சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்குப் பரிந்துரைக்கப்படுவது இதன் கீழ் செயற்படுத் தப்படுகிறது.
பல்வேறு அரசாங்கங்களின் கீழ் இந்நாட்டில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் வறுமையை ஒழிப்பதை மாத்திரம் இலக்காகக் கொண்ட வேலைத்திட்டங்களாக உள்ளதோடு, அதற்கு பதிலாக, சமூக வலுவூட்டல் ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஊடாக “பிரஜாசக்தி” திட்டத்தை நடை முறைப் படுத்துவது இதன் சிறப்பம்சமாகும். எனவும், இலங்கையில்  வறுமையை ஒழிப்பதில் அதி கூடிய பங்களிப்பைச் செய்த கல்வித்துறை, வறுமை ஒழிப்புக்கான அணுகுமுறையாக இது வரை முறைப்படி அங்கீகரிக்கப்படாததால், இத்தகைய மூலோபாயங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை உருவாக்கப்பட உள்ளதாகவும். வறுமையில் தாக்கம் செலுத்தும் சுகாதாரம், போக்குவரத்து, உணவு பாதுகாப்பு மற்றும் சந்தைப்படுத்தல் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் அரச தரப்பு செய்தி கள் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தப் புதிய அணுகுமுறையின் மூலம் சமூக வலுவூட்டல் பொறிமுறையை நடைமுறைப்படுத்த மூன்று புதிய கட்டமைப்பு மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. தேசிய மட்டத்தில், ஜனாதிபதியின் தலைமையில் “பிரஜா சக்தி” தேசிய கொள்கைப் பேரவை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது டன், 09 அமைச்சர்கள் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.
புதிய கட்டமைப்பு மாற்றங்களின் ஊடாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே தேசிய கொள்கைப் பேரவையின் நோக்கமாகும். கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே இதன் தலைவராகச் செயற்படுகிறார்.
கொள்கை சபையின் முடிவுகளை செயல்படுத்த அமைச்சரின் தலைமையில் ஒரு பிரஜாசக்தி தேசிய வழிகாட்டுதல் குழு நிறுவப்பட்டுள்ளது. அதில் 9 அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண சபை பிரதம செயலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
ஜனாதிபதியின் சிரேஸ்ட செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) குழுவின் செயலாளராகவும், அமைப்பாளராகவும் செயல்படுகிறார். பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள், அமைச்சுக்கள் மற்றும் மாகாண சபைகள் ஊடாக தேசிய மட்டம் வரை இந்த தேசிய திட்டத்தை ஒருங்கிணைக்க கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில்ஒரு அபிவிருத்திச்சபை நிறுவப்படும். இந்தக் குழுவின் தலைவர் பிராந்திய அபிவிருத்திக் குழு வின் தலைவரால்  நியமிக்கப்படுவார், மேலும் பிரதேச செயலகத் தில் இணைக்கப்பட்ட ஒரு அதிகாரி செயலாளராக நியமிக் கப்படுவார்.
சமூக வலுவூட்டல் பணிக்கு உதவும் அபிவிருத்தி முடிவுகளை எடுக்கவும் குறிப்பாக சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய மக்களை அடையாளம் காண இந்த சபை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதற்காக, நிபுணர்கள், தொழில் முனைவோர், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், அரச ஊழியர்கள் உட்பட அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு குழு நியமிக்கப்படும்.
இந்த செயலமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி யின் சிரேஸ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, தற்போதைய அரசாங்கம் அதன் கொள்கை அறிக்கையின்படி “வளமான நாடு – அழகான வாழ்க்கையை” உருவாக்குவதற்கு மூன்று முக்கிய திட்டங்களை முன்மொழிந்துள்ளதாக சுட்டிக் காட்டினார்.
டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்ட பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக குறுகிய கால பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெறப்படும் நன்மைகளை நாட்டின் அனைத்து மக்களுக்கும் நியாயமாக விநியோகித்து அதன் மூலம் சமூகத்தை வலுப்படுத்தும் நோக்கில் “பிரஜாசக்தி” திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்ற விளக்கத்தை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆனால்  “பிரஜா சக்தி அரசியல் சார்ந்ததல்ல, கட்சி சார்ந்ததல்ல” என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டாலும், நடைமுறையில் ஒரே கட்சி சார்ந்த நபர்களின் மேலாதிக் கம், மாற்றுக் கருத்துடையோர் விலக்கப்படுதல், அரசியல் பிரச்சார மொழி  பயன்படுத்தப்படுதல் போன்ற விமர்சனங் கள் வலுப்பெற்று வருகின்றன.
அரசியல் சார்பற்ற தன்மை என்பது அறிவிப்புகளால் நிரூபிக்கப்படுவதல்ல; அது நடைமுறையால் மட்டுமே நிரூபிக்கப்பட வேண்டும். சில இடங்களில், குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்ந்தவரே தலைவராக இருக்க வேண்டும் என்ற மறைமுக நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறப்படுவது, இந்த செயத்திட்டத்தின் சுயாதீனத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.
எனவே, பிரஜா சக்தி செயத்திட்டம் உண்மையில் மக்களுக்கானதாக இருக்க வேண்டுமெனில், அது அதன் சுற்றுநிருபங்களுக்கு ஏற்ப, அரசியல் நடுநிலையுடன், பொது நிதி பொறுப்புடன் செயல்படுவது தவிர வேறு வழியில்லை. இல்லையெனில், ஒரு மக்கள் வலுப்படுத்தல் திட்டம் அரசியல் கருவியாக மாறும் அபாயம் தவிர்க்க முடியாததாகும். அரசுத் திட்டங்கள் அதிகாரத்தின் வெளிப் பாடு அல்ல; அவை சட்டத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பொதுப் பொறுப்புகளாகும்  என்பதை உணர்ந்து இந்த திட்டம் முன்நகர்த்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.