டித்வா புயல்: சேதமடைந்த அனைத்து மதத் தலங்களும் மீண்டும் கட்டியெழுப்பப்படும் – ஜனாதிபதி

டித்வா புயலால் சேதமடைந்த அனைத்து மதத் தலங்களையும் அவற்றின் தொல்லியல் பெறுமதியைப் பாதுகாத்து மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

டித்வா புயலால் சேதமடைந்த  மதத் தலங்களை புனரமைப்பதற்கான ‘கட்டியெழுப்புவோம் ஒன்றிணைந்த உறுதியுடன்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (27) முற்பகல் கம்பளை, தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

டித்வா புயலால் கண்டி, உடபலாத பிரதேச சபைப் பகுதியில் 06 மதத் தலங்கள் முழுமையாக சேதமடைந்ததுடன் 15 மதத் தலங்கள் பகுதியளவு சேதமடைந்தன். அவற்றை மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் புயலால் சேதமடைந்த தொரகல, பீகொக் ஹில் குடியிருப்பின் ஸ்ரீ போதிருக்காராம விஹாரையின் புனரமைப்புப்  பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.

டித்வாபுயலால் சுமார் 1,350 மத, கலாசார மற்றும் தொல்பொருள் தலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கிராமங்கள், விகாரைகள் மற்றும் மதத் தலங்களுக்கு இடையேயான தொடர்பை மீண்டும் நிலைநாட்ட இந்த மதத் தலங்களை விரைவாக மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.