பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை: அம்பிகா சற்குணநாதன்  சுட்டிக்காட்டு

“இலங்கையில் யுத்த காலத்தில் பாலியல் வன்முறைகள் இடம்பெற்றமையும், அம்மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் புதிய அறிக்கை ஊடாக மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன்  சுட்டிக்காட்டியுளார்.

மேலும், ” மீறல்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமல் இருப்பது ஒருபுறமிருக்க குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இதனை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி பற்றியும், அதற்கு அப்பாலும் பல உண்மைகளை வெளிப்படுத்துவதற்குத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ள போதிலும், அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு, உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு அரசாங்கம் இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று தெரிவித்தார் அம்பிகா.

“யுத்த காலத்தில் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளானவர்கள் அதன் நீட்சியாக தற்போதுவரை பல்வேறு உளவியல் தாக்கங்களுக்கு முகங்கொடுத்துவருவதாகவும், அம்மீறல்கள் பற்றி முறைப்பாடு அளிப்பவர்கள் காவல்துறை மற்றும் ராணுவத்தினரின் தொடர் கண்காணிப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு இலக்காவதாகவும்” அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் ‘இப்புதிய அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறது என்பது பற்றி தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் அரசாங்கம் உண்மையாகவே ஒரு நியாயமான தன்முனைப்பைக் கொண்டிருக்குமாயின், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வருவதற்கும், இங்கு அவர்களது பணியை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

நன்றி :பிபிசி தமிழ்