மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவோம் – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் ஆராய்வதற்கு பாராளுமன்றத்தால் நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குழுவில் முன்னிலையாகி எமது தரப்பு யோசனைகளை முன்வைக்க தயாராகவுள்ளோம். நடைமுறையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு கண்டால் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

மாகாணசபைத் தேர்தல் குறித்து  கருத்து தெரி போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலினால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.

மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட குழுக்களுக்கு பல யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

தேர்தல் சட்டத்தில் உள்ள சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானமளித்துள்ளது. ஆகவே இந்த விடயத்தில் பாராளுமன்றம் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலை பழையத் தேர்தல் முறையிலோ அல்லது புதிய தேர்தல் முறையிலோ நடத்த வேண்டும் என்று அரசியல் தரப்பில் குறிப்பிடப்படுவதை அவதானிக்க முடிகிறது. கடந்த காலங்களை காட்டிலும் தற்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் அதிக கரிசணை கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு 12 பேரை உள்ளடக்கிய குழு ஒன்றை நியமிக்கும் யோசனை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது சிறந்ததொரு தீர்மானமாகும்.

பாராளுமன்ற உத்தேச தெரிவுக்குழுவில் முன்னிலையாகி தேர்தல் முறைமை தொடர்பிலும், மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்த யோசனைகளை முன்வைக்கவுள்ளோம். இந்த குழு ஊடாக ஒரு தீர்வு எட்டப்பட்டால் மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தலாம்.

தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டசிக்கலுக்கு தீர்வு கண்டால் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வோம். மாகாணசபைத் தேர்தலுக்காக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.