கிவுல் ஓயா திட்டம் ஆக்கிரமிப்புக்கான அடி : விதுரன்

A01.jpg கிவுல் ஓயா திட்டம் ஆக்கிரமிப்புக்கான அடி : விதுரன்
வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்க ளின் எல்லைப் பகுதிகளில் நீண்டகாலமாகத் தொடரும் நில ஆக்கிரமிப்பு விவகாரம், தற்போது ‘கிவுல் ஓயா’ நீர்ப்பாசனத் திட்டத்தின் ஊடாகப் புதியதொரு அச் சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
கடந்தவாரம் முழுவதும் பாராளுமன்றத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளான வைத்தியர் சத்தியலிங்கம், துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகி யோர் இத்திட்டத்தின் ஆபத்து குறித்துத் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்தனர்.
குறிப்பாக, வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் டாக்டர் சத்தியலிங்கம் முன்வைத்த வாதங்களும், களத்தில் ரவிகரன் முன்னெடுத்த போராட் டங்களும், பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் பொன்னம் பலம் உள்ளிட்டோர் வழங்கிய கடும் அழுத்தங்க ளும் அரசாங் கத்தைச் சற்றுத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.
இந்த அழுத்தங்களின் விளைவாகவே, பாராளு மன்ற வளாகத்தில் அமைச்சர் லால் காந்த தலைமையில் ரவிகரன் மற்றும் சத்தியலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது. ஆனால் அச் சந்திப்பு கூட முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு நடத்தப் பட்டதொன்றாக இல்லை.
தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்பட்டு வரும் அழுத் தங்களை சமாளிப்பதற்காகவும் அங்கு களத்தில் பணி யாற்றும் உபாலி சமரசிங்கவுக்கு காணப்படும் நெருக்கடி களை சாமாளிப்பதற்காகவும்  வன்னி மாவட்டத்தை கையாளும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தனது தோழர் லால்காந்தவை அழைத்து சந்திப்பை நடத்தியுள்ளார் என்பது ஒரு சூட் சுமமான நகர்வாகும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இச்சந்திப்பின்போது, குறித்த திட்டம் சம்பந்தமாக தொடர்புடைய சகல தரப்பினருடனும் பெப்ரவரியில் கலந்துரையாடுவதாகவும் பிற மாவட்டங்களில் இருந்து குடியேற்றங்கள் செய்யப்படாது என்றும் அமைச்சர் லால் காந்தவால் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2011 ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் மிகுந்த இரகசியமாகப் பேணப்பட்டு வரும் இந்தத் திட்ட மானது, வவுனியா மாவட்ட மக்களின் ஒப்புதலின்றி திணிக் கப்படுகிறது. அதற்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வந்த நிலையில் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது 23,456 மில்லியன் ரூபா மதிப்பீட்டிலான இத்திட்டத்திற்குத் அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட் டங்களின் நீர்த்தேவையை நிவர்த்தி செய்வதாக மேலோட் டமாகக் கூறப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம் 1983 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றப் பகுதியான மகாவலி – எல் வலயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதே ஆகும்.
சுமார் 480,000 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட மகாவலி – எல் வலயம், ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்ட தமிழினப் பூர்வீகப் பகுதிகளில் இனப்பரம்பல் மாற்றத்திற் காகவே பயன் படுத்தப்பட்டு வருகிறது.
1964 முதல் 1968 வரையிலான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி ஆணையம் மற்றும் உணவு விவசாய நிறுவனம் இணைந்து மகாவலி நீரை வட மத்திய கால்வாய் ஊடாக இப்பகுதிக்குக் கொண்டு வரத் திட்டமிட்டன.
ஆனால், புவியியல் ரீதியாக அது சாத்தியமற்றது எனத் தெரிந்தும், குடியேற்றங்களை மட்டும் முன்னெடுத்த ஆட்சியாளர்கள், தற்போது வவுனியா வடக்கின் மழைநீரைச் சேமித்து அதேகுடியேற்றவாசிகளுக்கு வழங்க முற்படுவதே இந்த ‘கிவுல் ஓயா’ திட்டமாகும்.
இத்திட்டத்தின் தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் புள்ளிவிபரங்களை ஆராயும்போது, இது உள்ளூர் தமிழ் மக்களுக்கு எவ்விதப் பலனையும் தராது என்பது தெளி வாகிறது.  வவுனியா வடக்கின் அடர்ந்த காடுகள் மற்றும் சிற்றருவிகளில் இருந்து பாயும் நீரைத் தேக்க 4.41 கிலோமீட்டர் நீளமான அணைக்கட்டு கட்டப்படவுள்ளது. இதன் மூலம் 64 மில்லியன் கனமீட்டர், அதாவது 51,904 ஏக்கர் அடி நீர் சேகரிக்கப்படும்.
இந்த நீர்த்தேக்கத்திற்காக வவுனியா வடக்கு பிரதேசச் செயலகப் பிரிவுக்கு உட்பட்ட 3,900 ஏக்கர் நிலப்பரப்பு நீரேந்துப் பகுதியாக மாற்றப்பட்டு முழ்கடிக்கப்படும். இந்தத் திட்டத்தினால் பயன்பெறப்போகும் 6,000 விவசாயக் குடும்பங்களில், ஏற்கனவே உள்ள 4,372 விவசாயிகள் மற்றும் 1,628 புதிய குடியேற்றவாசிகள் உள்ளடங்கப்போகின்றனர்.
இதில் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவெனில், 1,700 ஹெக்டெயர் (4,100 ஏக்கர்) புதிய காடுகள் அழிக்கப்பட்டு புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்படும் எனத் திட்ட முன் மொழிவில் நேரடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
13கிலோமீற்றர் நீளமான கால்வாய் ஊடாக இந்த நீர் கொண்டு செல்லப்படும்போது, பாதிக்கப்படும் வவுனியா வடக்கு மக்களுக்குப் போதிய நட்டஈடோ அல்லது அவர்களின் விவசாய நிலங்களுக்கான நீர் உத்தரவாதமோ வழங்கப்படவில்லை என்பது பாரிய சமூக அநீதியாகும்.
சுற்றுச்சூழல் ரீதியாகப் பார்த்தால், இத்திட்டம் ஒரு பெரும் பேரழிவை நோக்கிச் செல்கிறது. இலங்கையில் வேறு எங்கும் காணப்படாத அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இத்திட்டத்தினால் அழியும் எனச்சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கை எச்சரிக்கிறது. ஆனாலும் அந்த அறிக்கை திட்டத்துக்கு அனுமதி அளித்திருக்கின்றமை வேடிக்கையானது.
2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 13,000ஏக்கர் நிலம் வனவளத் திணைக்களத்தால் மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பார்க்கின்றபோது வெடிவைத்த கல்லு மற்றும் பட்டிக்குடியிருப்பு கிராமங்களுக்குச் சொந்த மான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களும் உள்ளடக்கப்பட்டே வழங்கப்பட்டுள்ளன.
இங்குள்ள திரிவச்சகுளம் போன்ற நீர்நிலைகள் மூன்று சந்ததிகளாகத் தமிழ் மக்களால் பயன்படுத்தப் பட்டவை. 1983 கலவரங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் மீளத் திரும்பித் தமது நிலங்களைத் துப்புரவு செய்த போது, அவர்கள் வனவளத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நீதிமன்ற அலைக்கழிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
ஆனால், அதேகாலப்பகுதியில் மகாவலி அதிகார சபையின் ஆதரவுடன் 25க்கும் மேற்பட்ட பெரும்பான் மையினக் குடும்பங்கள் அதேநிலத்தில் ‘அந்தரவௌ கமக்காரர் அமைப்பு’ என்ற பெயரில் விவசாயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
200 ஏக்கருக்கும் அதிகமான காடுகள் பாரிய இயந்திரங்களைக் கொண்டு அழிக்கப்பட்டபோது மௌனம் காத்த அரச இயந்திரங்கள், தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மட்டும் நசுக்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது தேர்தல் அறிக்கையில் ‘இனப்பரம்பலை மாற்றும் செயற்பாடுகள் நிறுத்தப்படும்’ என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போதைய அமைச்சரவை முடிவுகள் அந்த வாக்குறுதிக்கு நேரெதிரானதாகவே காணப்படுகின்றது,  வவுனியா மாவட்டத்தில் வயற்காணியற்ற ஆயிரக் கணக்கான தமிழ் மக்கள் இருக்கும்போது, 13,000 ஏக்கர் நிலத்தை ஒரு குறிப்பிட்ட குடியேற்ற வலயத்திற்காக மட்டும் பயன்படுத்துவது சமத்துவம் பேசும் ஆட்சியாளர்களின் சமத்துவமற்ற பொருளாதாரக் கொள்கையின் வெளிப் பாடாகும்.
இனவாதமும், ஊழலும் இல்லாத நாட்டை உருவாக்குவதாகக் கூறும் புதிய அரசாங்கம், கடந்த கால அரசுகளின் அதேமேலாதிக்கச் சிந்தனையுடன் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனைவது அதன் உண் மையான முகத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.
தமிழ் மக்களின் நில உரிமைகளையும், சுற்றாடல் சமநிலையையும் கருத்தில் கொள்ளாத இத்தகைய திட்டங்கள் நாட்டின் நீண்டகால அமைதிக்குச் சவாலாகவே இருக்கப்போகிறது.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் பங்களிப்புடன், வெளிப்படையான ஆய்வுகளின் பின்னரே இத்திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது அவ்விதமான நிலைமைகள் காணப்படவில்லை.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டது, அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. இதற்குப் பின்னர் கலந்துரையாடல்களை செய்து மீண்டும் களத்திலிருந்து ஆரம்பிப்பது சாத்தியமாகுமா?
ஆகவே கலந்துரையாடல் என்ற தேசிய மக்கள் சக்தியின் காய்நகர்த்தலுக்கான தந்திரோபாய ரீதியான வியூகம் வகுக்கப்பட்டால் மட்டுமே இத்திட்டத்தினை நிறுத்த முடியும். இனரீதியான குடிப்பரம்பல் வவுனியா வடக்குக்குள் பேரலையாக வருவதை தடுக்கலாம்.