என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
மேலும் எமது கட்சியிலும் ஒருசிலர் அவ்வாறே நினைக்கிறார்கள். என்மீது பழிசுமத்தி என்னை வெளியேற்றி பதவியை பெற்றுக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். அது வெறும் பகல் கனவு மாத்திரமே, எனது மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள்.
எனது மக்களுக்கான பணியை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளேன்.ஜனாதிபதியாகும் கனவு காணும் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்துக்கு ஆடையணிந்துக் கொண்டு வருவாராயின் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடாத காரணத்தால் தான் என்மீது எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று (நேற்று முன்தினம்) எனது பெயரை குறிப்பிட்டு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது.
தயாசிறி ஜயசேகர 2026.01.08 ஆம் திகதியன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான எஸ்.சிறிதரனை அரசாங்கம் பயன்படுத்துகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான ‘ தமிழ் சிலோன்’ என்ற வலைத்தளத்தில் இந்த செய்தி முழுமையாக வெளியாகியிருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுக்கு வசிப்பதற்கு இடமில்லை ஆனால் சிறிதரன் 1200 ஏக்கர் காணியை தன்வசப்படுத்தியுள்ளார். அதேபோல் சுமார் 7 கோடி ரூபா நிதியை சிறிதரனும் அவரது மகனும் வைப்பிலிட்டுள்ளார்கள் என்று தயாசிறி ஜயசேகர சபையில் குறிப்பிட்டிருந்தார்.
பூநகரி மின்னுற்பத்தி திட்டத்திலும் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார். எனது 16 ஆண்டுகால பாராளுமன்ற பயணத்தில் நீதியாகவும்இ நீதியாகவும் செயற்பட்டுள்ளேன்.அரசியலமைப்பு பேரவையில் நீதியாகவும், சுயாதீனமாகவும் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுத்துள்ளேன். எவரும் என்னை நிர்பந்திக்கவில்லை. அரசாங்கத்துக்கு வால் பிடித்து அவர்களுக்கு சார்பாக செயற்பட வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.
பல கட்சிகளுக்கு தாவிச் செல்லும் தயாசிறி சிரேஷ்ட அரசியல்வாதியாவார். அவர் நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்கள் முற்றிலும் தவறானது. எந்த வங்கியில், யாரால், எப்போது நிதி வைப்பிலிடப்பட்டது என்பதை தயாசிறி குறிப்பிட வேண்டும்.
தயாசிறி ஜயசேகர சிங்கள பௌத்த அரசியல்வாதி மற்றும் நியாயமானவர் என்றால் அடுத்த பாராளுமன்ற அமர்வில் என்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.உண்மையில் அவர் ஆடையுடன் தான் பாராளுமன்றத்துக்கு வருகிறார் என்றால் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று உயரிய சபையில் வலியுறுத்துகிறேன்.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 2025.07.25 ஆம் திகதியன்று ‘சிவில் புத்தி பெரமுன’ என்ற அமைப்பின் உறுப்பினரான சஞ்சய் மாவத என்பவர் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்தார் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த முறைப்பாடு தொடர்பில் என்ன முறைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. ஏன் அறிக்கை வெளியிடவில்லை.
அதேபோல் 2025.12.31 ஆம் திகதியன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. ஏன் இதுவரையில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. பூநகரி மின்திட்டம் தொடர்பில் அப்பிரதேசத்தின் அரசாங்க அதிபர், அரச அதிகாரிகளை ஏன் இதுவரையில் விசாரிக்கவில்லை. தயாசிறி ஜயசேகரவிடம் தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள்.
தன்னை சிரேஷ்ட அரசியல்வாதியாக காட்டிக் கொள்ளும் தயாசிறி ஜயசேகர ஏன் பொய்யுரைக்க வேண்டும். தயாசிறி ஜயசேகர அண்மையில் என்னுடன் உரையாடும் போது ‘ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளேன்.வடக்கு மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்களா’ என்று கேட்டார். ‘ உங்களின் முகம் தமிழர்களுக்கு பரீட்சயமானது அல்ல ஆகவே முதலில் வடக்கு மாகாணம் உட்பட தமிழ் மக்களுடன் பழகுங்கள்’ என்று அவருக்கு பதிலளித்தேன்.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நியாயமற்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையொப்பமிடுமாறு குறிப்பிட்டார்கள். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன் . எனது கட்சியும் அவ்வாறே குறிப்பிட்டது. எதிர்க்கட்சியில் இருந்துக் கொண்டு ஏதும் பேசலாம்,சேறுபூசலாம் என்பது நியாயமற்றது. கிபுல் ஓயா திட்டம், திருகோணமலை புத்தர் சிலை விவகாரம், தையிட்டி விவகாரம் பற்றி சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர ஏன் பேசவில்லை.
சிறிதரன் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து விட்டார் என்று கத்துகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் 2 இலட்சம் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது, காணிகள் விடுவிக்கப்படவில்லை. இராணுவத்தினர் சலூன், முன்பிள்ளை பள்ளி நடத்துகிறார்கள். திறந்தவெளி சிறைச்சாலையாக யாழ்ப்பாணம் இருக்கிறது. வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி தான் இடம்பெறுகிறது. தயாசிறி, சஜித் ஆகியோர் ஏன் இதுபற்றி பேசுவதில்லை.
இராணுவ அதிகாரி நியமனத்துக்கு சிறிதரன் ஆதரவளித்து விட்டார் என்று குறிப்பிடுகிறார்கள். 2024.01.21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தேர்தலில் .இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். இதனைத் தொடர்ந்து கனடாவில் உள்ள டி.பி.எஸ். ஜெயராஜ்’ சிறிதரன் ஒரு பிரிவினைவாதி அவர் சமஸ்டி கோருகிறார்’ என்று எழுதியுள்ளார். சிங்கள மக்களிடம் நான் பிரிவினைவாதி என்று குறிப்பிடுகிறார்கள். தமிழர்களிடம் நான் இராணுவ அதிகாரி நியமனத்துக்கு ஆதரவளித்ததாக குறிப்பிடுகிறார். நான் யாருக்குரியவன் என்பதை முதலில் குறிப்பிடுங்கள்.
நான் சிங்கள மக்களுக்கும் எதிரி, தமிழ் மக்களுக்கும் எதிரி என்கிறார்கள். இதன் பின்னணியின் நிகழ்ச்சி நிரல் என்ன,? தயாசிறி ஜயசேக,சாமர சம்பத் கூறுவதென்ன,2011. பங்குனி மாதம் அநுராதபுரம் உடுக்குளம் பகுதியில் கோட்டபய ராஜபக்ஷ தனது இராணுவ குழுவை வைத்து என்மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டார். நான் மயிரிழையில் தப்பினேன்.
2013 ஆம் ஆண்டு எனது அலுவலகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டு எமது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு 13 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள். அதே காலப்பகுதில் எமது அலுவலகத்தில் சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் .இருக்கும் போது 500 பேர் சிங்க கொடியுடன் வந்து அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். தயாசிறி ஜயசேகர இதுபற்றி ஏன் பேசவில்லை.சாமர சம்பத்,அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் அப்போது ஏன் பேசவில்லை. ஏன் என்னை தற்போது இலக்காக கொண்டு என் மீது பாய்கிறார்கள்.
என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள்.எமது கட்சியிலும் ஒருசிலர் அவ்வாறே நினைக்கிறார்கள். என்மீது பழிசுமத்தி என்னை வெளியேற்றி பதவியை பெற்றுக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். அது வெறும் பகல் கனவு மாத்திரமே, எனது மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். எனது மக்களுக்கான பணியை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளேன்.
என்மீதான குற்றச்சாட்டுக்களை ஏன் முறையாக விசாரிக்கவில்லை. அரசாங்கத்தின் பலம் என்ன? அரசாங்கமும் எனக்கு எதிராக செயற்படுகிறது. எதிர்க்கட்சியினரும்,எம்மவர்களும் என்னை பழிவாங்க பார்க்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும். நீதியை நிலைநாட்டுங்கள். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மையை வெளிப்படுத்துங்கள். என்று வலியுறுத்துகிறேன் என்றார்.



