அனுமதியின்றி வைக்கப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகளை அகற்ற தீர்மானம்

மட்டக்களப்பு  ஏறாவூர் பற்று செங்கலடி சபை  பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அனுமதிபெறப்படாமல் நடப்பட்ட பதாகைகளை சட்டத்தின் கீழ் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ள செங்கலடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (22)  தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வீதிப்பிரச்சினை, வடிகான் பிரச்சினை, தொல்பொருள் பொயர்ப்பலகை உனவிவகாரம் மற்றும் பன்குடாவெளி வட்டாரப்பகுதியில் சூரிய மின்சக்தி திட்டம் அமைத்தலுக்கான அனுமதியை மீள் பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது முக்கிய பிரச்சனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சபை அமர்வின் போது உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன.

அனுமதியற்ற செயற்பாடு 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கச் சட்டத்தின்படி, உள்ளூர் அதிகார சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச சபையின் அனுமதி அவசியம். ஆனால், தொல்பொருள் திணைக்களம் எவ்வித ஆலோசனையுமின்றி இப்பணிகளை மேற்கொண்டுள்ளது.

தொல்பொருள் இடங்களாகக் கூறி மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் பொதுச் சந்திகளிலும் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இதனால் 56 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.

தொல்பொருள் திணைக்களத்தினால் நாட்டப்பட்டுள்ள அடையாளப் பலகைகளில் தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாக தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற விதியை மீறி, மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்பாக மேலும் தெரிவித்த நிலாந்தன் நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.

1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றிய வர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர்.

முன்னர் இருந்த  எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது. இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகிறது, அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது.

இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

மேலும் இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.வவாநந்தன் தமது கடும் கண்டனமான முறையில் தனது வாதத்தை அரசின் செயற்பாட்டிற்கு எதிராக முன்வைத்தார்.

மேலும் சபையில் தொல்பொருட்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, நுணுக்கமான முறையில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல் என்றும் இதன்போது  விமர்சிக்கப்பட்டது.

முறையான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஆவணங்களின்றி நாட்டப்பட்ட பலகைகள் குறித்து விளக்கம் அளிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு வார கால அவகாசம்  வழங்கப்பட்டுள்ளதாக் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் மு.முரளிதரன் தெரிவித்தார்.

வழங்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அடையாளப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபையில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசிற்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதோடு, தேவைப்படின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சபை  தீர்மானித்துள்ளது.

தொல்பொருட்களைப் பாதுகாப்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும், ஆனால் அவை சட்ட ரீதியாகவும், மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே சபையின் நிலைப்பாடாக உள்ளது என்றார்.

இதன் போது சட்ட ரீதியாக பெயர்ப்பலகைகளை அகற்றுவது தொடர்பாக உறுப்பினர்களது ஆதரவுடன் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.