யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சூழல்சார் சுற்றுலாத் திட்டத்தின் போது, அரசுக்குச் சொந்தமான நிதியும் சொத்துக்களும் மூன்று உயரதிகாரிகளால் முறையற்ற வகையில் பயன்படுத்தப்பட்டுச் சூறையாடப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (21) அதன் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதேச சபை உறுப்பினரும், தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான சுவாமிநாதன் பிரகலாதன், இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகளைச் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் வேலணை பிரதேச இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பைக் கருத்திற்கொண்டும், சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காகவும் இந்ததிட்டம் கொண்டுவரப்பட்டது.
ஆனால், இதன் பொறிமுறை முறையாகக் கட்டமைக்கப்படவில்லை.
தொடக்கத்தில் வேலணை பிரதேச செயலகத்தால் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டத்தை, அன்றைய மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச சபையிடம் வலுக்கட்டாயமாக ஒப்படைத்திருந்தார்.
2018ஆம் ஆண்டிலேயே இந்த திட்டத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் மோசடிகள் குறித்து சபை சுட்டிக்காட்டியதுடன், துறைசார் அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
இருப்பினும் இதுவரை முறையான தீர்வு எட்டப்படவில்லை.
இந்த ஊழல் தொடர்பாக உடனடியாக ஒரு விசேட விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என சுவாமிநாதன் பிரகலாதன் சபையில் வலியுறுத்தினார்.
மேலும், சூறையாடப்பட்ட அரச நிதியைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து மீளப்பெறத் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது இந்தச் சுற்றுலாத் தளம் முறையான பராமரிப்பு இன்றி சமூகச் சீரழிவுகளின் மையமாக மாறி வருவதாகவும் சபையில் கவலை வெளியிடப்பட்டது.



