ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை, பௌத்தர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கூறி, வடக்கில் பௌத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ‘மக்கள் போராட்ட குடிமக்கள்’ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வடக்கிலுள்ள பௌத்த ஆலயங்களுக்குச் செல்பவர்கள் மதக் கடமைகளை நிறைவேற்றுவதை விட, இனவாதத்தைத் தூண்டும் நோக்கிலேயே அங்கு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கருத்து பௌத்தர்களின் மத உணர்வுகளையும் அடிப்படை உரிமைகளையும் புண்படுத்துவதாக ‘மக்கள் போராட்ட குடிமக்கள்’ அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பு கடந்த காவல்துறை தலைமையகத்தில் அண்மையில் கடிதமொன்றை ஒப்படைத்தது.
இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள காவல்துறை ஊடகப் பேச்சாளர் எவ்.யு.வூட்லர் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
குறித்த கடிதம் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி இந்த முறைப்பாடு தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் விசாரணைகள் நிலுவையில் உள்ளதால், காவல்துறையினரால் தற்போது வரை எவ்வித நேரடி நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், வடக்கிலுள்ள பௌத்த வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அங்கு செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என மனுதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதியின் உரை தென்னிலங்கையிலும் வடக்கிலும் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது சட்ட ரீதியான விசாரணையாக மாறியுள்ளது.



