வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறி, அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள ‘கிபுல் ஓயா’ மகாவலி திட்டமானது தமிழ் மக்களின் நில உரிமைகளைப் பறிக்கும் செயல் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த திங்கட்கிழமை (20) இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குடிநீர் பிரச்சினை என்ற போர்வையில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் உண்மையான நோக்கம், வடக்கின் இனப்பரம்பலைச் சிதைப்பதே ஆகும் என அந்த திட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தினால் ஏற்படப்போகும் பேராபத்துகள் குறித்து கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் நாடாளுமன்றத்தில் ஏற்கனவே விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
எனவே இந்த திட்டத்தை அமுல்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட ரீதியாகப் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுக்கத் தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இந்தப் போராட்டம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நில உரிமைக்கானது.
எனவே, ஏனைய அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும், பொதுமக்களும் கட்சி பேதமின்றி தம்மோடு கைகோர்க்க வேண்டும்” என சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த போராட்டங்களை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த முதற்கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் அடுத்த சில நாட்களில் வவுனியாவில் நடைபெறவுள்ளன.
இதில் கலந்துகொண்டு பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து போராட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



