இலங்கையின் அதிபர் அநுரா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தபிறகு இலங்கை நாட்டின் அரச மைப்பில் திருத்தம் கொண்டுவர முனைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் அவர்களும், இலங்கை பயிரிடுதல், குழுக்கட்டமைப்புக்கான துணை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களும் சென்னையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தனர்.
பல்வேறு தமிழ்த் தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டு அதன்பிறகு இலங்கை அரசமைப்பு திருத்தத்தில் இந்திய ஒன்றியத்தின் பங்கு இன்றியமையாதது என்று இந்திய ஒன்றிய தலைமை அமைச்சர் மோடிக்கு கடிதம் எழுதுகிறார். 1987 ஆம் ஆண்டு இலங்கையில் நீதி அமைதி நிலவ இந்திய ஒன்றியத்தின் பங்கு மிக முக்கியமானது என்று இரு நாடுகளும் ஒத்துக்கொண்டதை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டி எழுதினார்.
இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து (1948 பிப்ரவரி 4) கடந்த 78 ஆண்டுகளாக சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு பாகுபடுத்தப்படுத்தி, அடக்கி ஒடுக்கி, வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, உரிமைகளை பறித்து ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்தது. இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு உருவாக்கப்பட்ட அரசமைப்புகள்(1947, 1972, 1978, 2019) ஒற்றையாட்சியை வளர்த்து பாதுகாக்க உதவின. இந்த ஒற்றையாட்சியால் திட்டமிட்ட இனப்படு கொலை நடந்தது. ஈழத்தமிழ் மக்களுடைய நிலங்கள், பண்பாட்டுக் கூறுகள், உரிமைகள், வரலாறுகள் பறிக் கப்பட்டன. ஈழத்தமிழர்களும், மலையகத் தமிழர்களும் உரிமையற்றவர்களாக மாற்றப்பட்டனர். அதனால் ஒற்றை யாட்சி உருவாக்கப்படக் கூடாதென தமிழ்நாட்டு முதல்வர் பரிந்துரையை முன்வைக்கிறார்.
தனது பரிந்துரையில் இந்திய ஒன்றிய அரசால் 1985 ஆம் ஆண்டு பூட்டானில் உள்ள திம்புவில் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் தமிழ்ப் பிரதி நிதிகள் முன்வைத்த திம்பு கோட்பாடுகளை சுட்டிக்காட்டு கிறார்.
தமிழ்த் தேசியம்: ஈழத்தமிழர்கள் தனித்து வாழ ஒரு தனித்துவமிக்க நாடு, பண்பாடு, வரலாறு. மரபு முதலியவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும். தமிழர் தாயகம்: வடக்கு, கிழக்கு மாகாணங்களை தமிழரின் தாயகமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
தன்னாட்சி உரிமை: தமிழரின் தாயகத்திற்கு தன்னாட்சி உரிமையை வழங்கி உறுதிபடுத்தவேண்டும்
குடியுரிமை: மலையகத் தமிழ் மக்களுக்கு முழு குடியுரிமை வழங்கவேண்டும்
கூட்டாட்சிதன்மை: அனைத்து இனக்குழுக்களும் சமத்துவத்திலும், பாகுபாடியின்மையிலும் வாழ உறுதிசெய்யும் ஆட்சி வேண்டும்.
ஓற்றையாட்சிக்கு எதிராக கூட்டாட்சியைக் கொண்டு வந்ததால்தான் மக்கள் உரிமையோடு வாழ முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரம் பரவலாக்கம் செய்யப்படவேண்டும். நாட்டின் சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும்.
பன்முகத்தன்மையோடு சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தவேண்டும். அவ்வாறு நிலைநிறுத்தும்போது கூட்டாட்சி முறை உருவாகும். இந்தக் கூட்டாட்சி முறைக்கு இந்திய ஒன்றியம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு முதல்வர் பரிந்துரைக்கின்றார்.
ஓன்றும் நடக்காத நிலையில் இந்தக் கூட்டாட்சி முறையை வலியுறுத்துவது நன்றாக இருந்தாலும் மலை யகத் தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் நடந்த இனப்படு கொலைக்கு என்ன நீதி? ஓர் இனப்படுகொலையை மூடிமறைப்பதாக இந்தப் பரிந்துரை அமைந்துள்ளது. இனப் படுகொலை நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தும் உரிய இடத்தில் சேர்த்து உரிய நயன்மையை பெற முடியாமல் போனது தமிழர்களின் பிரிவினையும், உலக நாடுகளின் கூட்டுச் சதியும் காரணங்களாகும். சிங்கள பேரினவாதத்தின் சர்வாதிகார போக்கும் இதற்கு காரணமாகும். கூட்டாட்சி முறைவேண்டுமா? என்று ஒரு பொது வாக்கெடுப்பு தேவையாக உள்ளது. ஐக்கிய நாடுகள் வழங்கும் தன்னாட்சி உரிமையை நிலைநிறுத்த அரசமைப்பை மாற்றம் செய்ய வேண்டும்.
தமிழர் அரசியல் கட்சிகள் அரசியல் பிழைப்பு நடத்துவதாலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தை சடங்குகளாக மாற்றி செயல்படுவதாலும், உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்காமலிருப்பதாலும் நமது நீதியை நாம் பெற முடியவில்லை. நமது பிரி வினையும், மோதல்களும் எதிரிக்கு பலமாக மாறிவிட்டது. அதனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் உள்ளதால் எந்தச் சட்டத்தையும் திருத்தத்தையும் எளிதாக கொண்டுவரமுடியும். அதற்கு பன்னாட்டு அழுத்தம் இருந்தால்தான் தமிழரின் உரிமையை நிலைநாட்ட முடியும். அதற்காக புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் உலக நாடுகளைச் சந்தித்து அழுத்தம் கொடுக்கவேண்டும். தமிழ்நாட்டு அரசு இந்திய ஒன்றிய அரசுக்கு பரிந்துரைப்பதுபோல உலக நாடுகளுக்கு தமிழர்களின் விருப்பத்தை அல்லது முடிவை அல்லது எதிர்பார்ப்பை தெளிவாக முன்வைத்து அழுத்தம் கொடுக்கவேண்டும்.
உலகில் வாழும் அனைத்து தமிழர் அமைப்புகள் ஒன்றுகூடி ஒற்றை இலக்கோடு உலக நாடுகளுக்கும், இலங்கைக்கும், தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்கவேண்டும். இதற்காக நாம் எல்லோரும் ஒன்றுசேர நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இதுவரை தனித்தனியாக செயல்பட்டது போதும். இனிமேலாவது ஒன்றுகூடி இந்திய ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இந்திய ஒன்றியம் இலங்கை அரசமைப்புத் திருத்தத்தில் ஈடுபடவேண்டும். இதில் தமிழர்களின் அழுத்தமும், உலக நாடுகளின் ஈடுபாடும் மிக முக்கியமானவை. இந்தச் சீர்திருத்தம் தமிழர்களின் தலையெழுத்தையே மாற்றி விடும். அதற்கு பிறகு நாம் உரிமையைப்பற்றியோ இனப்படு கொலையைப்பற்றியோ உலகின் எப்பகுதியிலும் பதிவு செய்ய முடியாது. தமிழர்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
தமிழ்நாட்டு அரசு ஒரு பரிந்துரையை வைத்தாலும் தமிழர்களாகி நாம் நமது பரிந்துரையை தெளிவாக திட்டமிட்டு, கூட்டாக சேர்ந்து முன்வைப்பது நமது கடமையாகும். உலகில் வாழும் அரசியல் தமிழ் அறிஞர்களும் பிறநாட்டு அரசியல் அறிஞர்களும் இணைந்து தன்னாட்சி உரிமையை நிலைநிறுத்த எவ்வழிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நன்கு ஆய்வுசெய்து இலங்கை அரசுக்கும், உலக அரசுகளுக்கும் கொடுத்து. அழுத்தம் தரவேண்டும். தன்னாட்சி உரிமைக்கு இனப்படுகொலையை காரணமாக முன்வைக்கவேண்டும். தமிழ்நாட்டு முதல்வர் இந்திய ஒன்றிய அரசுக்கு முன்வைத்த பரிந்துரையையும் கணக்கில் எடுத்து, மறுவாசிப்பு செய்து, நமது எதிர்பார்ப்பை முன்னிறுத்தவேண்டும். இனப்படுகொலையினால் தனிநா டும், தன்னாட்சியும் தன்னுரிமையும் வேண்டு மென்று அறைகூவல் விடுக்கின்றோம் என்று தெளிவுபட உரைக்க வேண்டும்.



