இந்தியப் பெருங்கடல் கடலோர நாடுகள் கூட்டணிக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம்

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள கடலோர நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவுள்ள இந்தியப் பெருங்கடல் கடலோர நாடுகள் கூட்டணி அமைப்பில் இணைவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக ரியூனா (Tuna) மீன் வள மேலாண்மையில் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் இந்த கூட்டணியின் நோக்கமாகும்.

இலங்கை, பங்களாதேஷ், இந்தோனேசியா, ஈரான், மடகஸ்கார், மலேசியா, மாலைத்தீவுகள், மொசாம்பிக், பாகிஸ்தான், சோமாலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.

இந்த பிராந்தியத்தில் அதிகப்படியான மீன்பிடித்தல் காரணமாக மீன் வளத்திற்கும், உணவுப் பாதுகாப்பிற்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைத் தடுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.

அத்துடன், கடலோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், கடல்சார் வளங்களை நிலையான முறையில் நிர்வகித்தல் ஆகியவற்றையும் நோக்காக கொண்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்கான முன்மொழிவை இலங்கை நீர்வாழ் மற்றும் கடல்சார் வள அமைச்சர் சமர்ப்பித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சரவையின் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.