எங்களது போர் தமிழர்களுக்கு எதிரானதல்ல : நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு

எங்களது போர் தமிழ் மக்களுக்கு எதிரானதல்லவெ பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று (21) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியபோது இதனை தெரிவித்த அவர், கடந்த கால யுத்தம் மற்றும் தற்போதைய மத விவகாரங்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.

தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே போர் புரிந்ததாகவும், தமிழ் மக்களுக்கு எதிராக அல்லவெனவும் குறிப்பிட்ட அவர், இந்த உண்மையை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழ் மக்கள் கதிர்காமத்திற்குச் செல்வதைப் போலவும், கத்தோலிக்க மக்கள் மடு தேவாலயத்திற்குச் செல்வதைப் போலவும், சிங்கள மக்கள் நாகதீப விகாரைக்குச் செல்லும் உரிமை கொண்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

விகாரைகள் அமைக்கப்படுவதை எதிர்ப்பதும், நாகதீப வழிபாடு இனவாதம் என ஜனாதிபதி கூறுவதும் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்தபோது ஒரு நிலைப்பாட்டையும், ஆட்சியில் இருக்கும்போது வேறு ஒரு நிலைப்பாட்டையும் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.