தையிட்டியில் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் பூர்வீகக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும், விகாரைக்குரிய காணியில் அதனை அமைப்பதற்குத் தாங்கள் ஒத்துழைக்கத் தயார் என்றும் அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை வலியுறுத்தினார்.
தையிட்டி விகாரை அமைக்கப்படுவதை தாம் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து அது கட்டப்பட்டிருப்பதையே மக்கள் எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“மக்களின் காணிகளை மக்களிடமே வழங்கிவிட்டு, விகாரைக்குரிய காணியில் அதனை அமைத்துக்கொள்ளுமாறும், அதற்கு தாங்கள் உதவத் தயார்” எனவும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம் நாட்டில் தற்போது எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், பயங்கரவாத தடைச்சட்டம் இனியும் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியே யாழ்ப்பாணத்தில் அச்சமின்றி, பாதுகாப்பின்றி வீதிகளில் நடந்து செல்ல முடிகிறது என்றால், இன்னும் ஏன் இந்தச் சட்டம் அமுலில் இருக்க வேண்டும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
இதேவேளை ஆட்சியைப் பிடிப்பதற்கு முன் திஸ்ஸ விகாரை, செம்மணி விவகாரம் மற்றும் பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண்போம் என்று உறுதியளித்த அநுர அரசு, தற்போது அந்த வாக்குறுதிகளை மறந்து செயற்படுவதாக அவர் சாடினார்.
முந்தைய அரசாங்கங்களைப் போலவே இனவாதத்தைப் பேசிக்கொண்டிருக்காமல், அதனைத் தடுப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றத்தில் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தினார்.
இந்த ஊடகச் சந்திப்பின் போது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் தனது விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



